×

ஊட்டி- கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் ஊட்டி - கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. நீலகிரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையாத போதிலும், நாள் தோறும் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழையும். குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் கன மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது.

கேத்தி பாலாடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்க துவங்கியுள்ளது. ஓரிரு நாட்கள் கன மழை பெய்தால், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் மழை குறைந்து காணப்பட்ட போதிலும் குளிர் அதிகமாக காணப்படுகிறது. நேற்று காலை முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான காற்றும் வீசத்துவங்கியுள்ளது. காற்று காரணமாக ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா அருகே சாலையோரத்தில் இருந்த சீகை மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து தடைப்பட்டது. அப்பகுதிக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து துவங்கியது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேக மூட்டம் மற்றும் மழையின் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

எந்நேரமும் மேக மூட்டம் காணப்படுவதால், பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மி.மீ.,ல்: ஊட்டி 22, குந்தா 25, அவலாஞ்சி 36, எமரால்டு 24, கெத்தை 24, கிண்ணக்கொரை 33, அப்பர்பவானி 18, குன்னூர் 74, கோடநாடு 40, கோத்தகிரி 26, கூடலூர் மற்றும் தேவாலாவில் தலா 4 மி.மீ., மழை பாதிவாகியுள்ளது.

Tags : road ,Ooty-Kotagiri , Ooty, Kotagiri
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி