×

பராமரிக்க மறந்த அதிகாரிகள் புதர் மண்டி கிடக்கும் கால்வாய்கள்

காரைக்குடி: கண்மாய், குளங்களுக்கு நீர் செல்ல வேண்டிய வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு மற்றும் புதர்மண்டி கிடப்பதால், எவ்வளவு மழை பெய்தாலும் பயனற்ற நிலையே தொடர்கிறது. காரைக்குடி தாலுகா பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட குளங்களும். 5க்கும் மேற்பட்ட கண்மாய்களும் உள்ளன. குளங்களில் நீர் நிறைந்தவுடன் அது வரத்து கால்வாய்கள் வழியாக வெளியேறி அருகில் உள்ள கண்மாயை சென்றடையும். கண்மாய், குளங்களுக்கு செல்லும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளன. கண்மாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. கண்மாய்க்கு செல்லக் கூடிய வரத்து கால்வாய்கள் முழுவதும் கட்டாமணக்கு, ஆகாயத்தாமரை, கோரைபுல் என புதர்மண்டி கிடக்கிறது. தவிர வரத்து கால்வாய்கள் தூர்வாராமல் மண் மேடாக காட்சி அளிக்கின்றன.

இதனால் காரைக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தும் எந்த கண்மாய், குளத்தில் விவசாயத்துக்கு ஏற்ற அளவு நீர் நிறைந்ததாக தெரியவில்லை. ஓடைபோல் கண்மாயின் ஓரத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. நகராட்சி பகுதியில் மழை காலத்திற்கு முன் முக்கிய கால்வாய்கள் தூர்வாரப்படாததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கும் அவலம் உள்ளது. தெருக்களில் உள்ள மழைநீர் கால்வாய்கள், ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாய்களை மீட்பது போன்ற பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. விவசாய அலுவலர் ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் ஆற்றுப்பாசம் மிகக்குறைவு. கண்மாய்களே முக்கிய பாசனமாக உள்ளது. நக ரபகுதிகளில் கண்மாய்களுக்கு வரவேண்டிய வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, வரத்துகால்வாய் அடைப்பு என்பது உட்பட பல்வேறு காரணங்களால் கண்மாய்களுக்கு வரவேண்டிய தண்ணீர் வரமால் வீணடிக்கப்படுகிறது. இதேநிலை நீடித்தால் பருவமழை காலங்களில் கூட கண்மாய்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் கேள்விக்குறியாகி விடும் என்றார்.

Tags : bush , Canals
× RELATED தீபாவளிக்கு ரெடியான ‘குட்டி ஜப்பான்’: புஷ்ஷ்… டம்… டமார்…