புஞ்சைபுளியம்பட்டி அருகே தயாரிப்பு தீவிரமாக இருந்தாலும் அகல் விளக்குகள் விற்பனை மந்தம்

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி அருகே அகல் விளக்குகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்தாலும் கொரோனாவால் விற்பனை மந்தமாக உள்ளது என மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம், அலங்காரிபாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்டம் தயாரிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மண்பானை, அகல்விளக்கு, மண் அடுப்பு மற்றும் மண்ணில் தயார் செய்யப்படும் பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வந்தனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால், கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக மழை பெய்ததால் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு வெயில் அடிப்பதால், அகல்விளக்கு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இது குறித்து காவிலிபாளையம் கிராமத்தில் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளி ஆறுமுகம் கூறியதாவது: அரசு அனுமதியோடு மண்ணெடுத்து மண்பானை, அகல்விளக்கு உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து வருகிறோம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அகல்விளக்கு விற்பனை மந்தமாக உள்ளது. வழக்கமாக 10 ஆயிரம் அகல் விளக்குகள் விற்பனையாகும் சூழ்நிலையில் தற்போது 7,000 அகல் விளக்குகள் மட்டுமே விற்பனையாகும் நிலை உள்ளதால் 30 சதவீத விற்பனை பாதிக்கும் அபாயம் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், அவிநாசி, திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். கொரோனா காரணமாக தற்போது விற்பனை மந்தமாகவே உள்ளது என்றார்.

Related Stories:

>