×

பயனற்று போகும் மலர்சாகுபடி குளிர்பதன கிடங்கு, சென்ட் பேக்டரி எல்லாம் காற்றில் கலந்த வாக்குறுதி

ஓமலூர்: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மலர்சாகுபடி நடக்கிறது. ஆனால் அதனை பாதுகாத்து விற்பதற்கான குளிர்பதன கிடங்கு மற்றும் வருவாய் ஈட்டித்தரும் சென்ட் தொழிற்சாலை போன்றவை அமைக்கப்படாதது விவசாயிகளை பெரும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இந்த வேதனையை குரலற்றவர்களின் குரலாக வெளிப்படுத்த இங்கே ஒலிக்கிறது இந்த பதிவுசேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், பூக்கள் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி, தாரமங்கலம் பகுதிகளில் குண்டுமல்லி, சன்னமல்லி, கோழிக்கொண்டை, பனமரத்துப்பட்டி, வாழக்குட்டப்பட்டி, பெரமனூர், அயோத்தியாப்பட்டணம், வலசையூர், ஓமலூர், வீராணம், கன்னங்குறிச்சி பகுதிகளில் குண்டுமல்லி, கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி, குரால்நத்தம் பகுதிகளில் அரளி, ரோஜா, சம்பங்கியும் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் முத்துகாபட்டி, மாதரமாதேவி, வடவூர், மோகனூர், கொல்லிமலை பகுதிகளில் சூரியகாந்தியும், தர்மபுரி மாவட்டத்தில் சாமந்தி, சம்பங்கி, குண்டு மல்லி, அரளி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தில் சாமந்தி பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஓசூரில் ரோஜாவும், ஜெர்பரா மலர்களும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஓசூர் ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சாமந்தி பூக்கள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடும் வறட்சியிலும் சிறிதளவு நீராதாரத்தை கொண்டு அதிகளவில் சாகுபடி செய்யலாம் என்பது தான் பூக்கள் சாகுபடியின் சிறப்பம்சம். ஆனால் நடப்பாண்டில் 4 மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக பருவமழை பொய்த்ததால் நீராதாரம் அடியோடு சரிந்து விட்டது. கூலிக்கு கூட, கட்டுப்படியாகாத நிலையில் தான் சாகுபடி நடக்கிறது.

இது ஒருபுறமிருக்க, அதிக விளைச்சல் உள்ள நேரங்களில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் பூக்களை பறித்து சாலையோரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர், பூக்கள் அறுவடை தொடங்கும் நேரங்களில் விலை இல்லையென்றால் ஆடு மாடுகளை கட்டி மேய்த்து விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக மழை பெய்யாத நேரத்திலும், அதிக மழை பெய்யும் நேரங்களிலும் பூச்செடிகள் அழுகி அழியும் நிலையும் உள்ளது. இதிலும் வறட்சியை தாங்கி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மலர்ந்த பூக்களை, பாதுகாப்பதற்கான வழிகள் எதுவும் இல்லாததால் அவை செடியிலேயே கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது என்பது விவசாயிகளின் வேதனை.நான்கு மாவட்டங்களிலும் நடப்பாண்டு வறட்சியை தாங்கி, மலர்ந்த பூக்களை முறையாக பராமரிக்க முடியவில்லை. எனவே குளிர்பதன கிடங்கு மற்றும் சென்ட் தொழிற்சாலை அமைத்து கொடுக்கவேண்டும்.

குளிர்பதன கிடங்கு அமைத்து கொடுத்தால் மலர்களை பாதுகாப்பாக வைத்து, நல்லவிலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம். சென்ட் தொழிற்சாலை இருந்தால் குண்டு மல்லி, ரோஜா போன்ற பூக்களுக்கு உள்ளூரிலேயே நல்ல விலை கிடைக்கும். எனவே, 4 மாவட்டங்களிலும் அரசு குளிர்பதன கிடங்குகள், சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதே மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தொடர் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், இதனை நிறைவேற்றுவதாக கூறி, வாக்குறுதி கொடுப்பதும், வெற்றிக்கு பிறகு அதை மறப்பதும் பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த வகையில் கடந்த தேர்தலிலும் இந்த வாக்குறுதி வலம் வந்தது. ஆனால் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட எந்த மக்கள் பிரதிநிதியும் இதற்குரிய முயற்சிகளில் முனைப்பு காட்டவில்லை என்று குமுறுகின்றனர் விவசாயிகள்.

Tags : florist ,warehouse ,St. Factory , Refrigerated warehouse, St. Factory
× RELATED பூக்கடை பகுதியில் அடுக்குமாடி...