×

கும்பப்பூ சாகுபடிக்கு கடைவரம்பு வரை தண்ணீர் கிடைக்குமா?

நாகர்கோவில்: கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் குமரி மாவட்டத்தில் கடைவரம்பு பகுதிகளுக்கு கும்பப்பூ சாகுபடிக்கு தண்ணீர் முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ என இரு பருவ காலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளது. விவசாயிகள் கும்பப்பூ நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நெல் வயல்களில் வரும் பிப்ரவரி மாதம் கடைசி வரை அறுவடை பணிகள் நடைபெறும். அதுவரை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது. மேலும் கடைவரம்பு வரை செல்லும் தண்ணீர் அந்த பகுதிகளில் எல்லாம் நிலத்தடி நீர்மட்டத்தையும் தக்க வைக்க உதவுகிறது. தற்போது பருவமழையில் போதிய அளவில் தண்ணீர் கிடைத்துள்ளதால் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. அதே வேளையில் அணைகளில் இருந்து திறந்துவிடப்படுகின்ற தண்ணீர் கிளைக்கால்வாய்கள் வழியாக கடைவரம்பு வரை உள்ள நெல் வயல்களில் சென்றடைந்தால் மட்டுமே விவசாயம் செழிப்பாக நடைபெறும்.

கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதற்கு முன்பாக குமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் பல கால்வாய்களிலும் கற்கள், மண் நிரம்பியுள்ளது. பல சானல்களும் புல் புதர்கள் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது. பொதுவாக கால்வாய்கள் ஆண்டுக்கு ஒரு முறை தூர்வாரப்படுகிறது. தற்போதும் தூர்வாரப்பட்ட பகுதிகளில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படாததால் பாதிக்கப்படுகின்ற இடங்களில் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே கடைசி நெல் வயல் வரை தண்ணீர் விநியோகம் செய்ய இயலும்.

மாவட்டத்தில் பட்டணங்கால்வாய், திருவிதாங்கோடு கால்வாய், பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய், அனந்தனாறு, நாஞ்சில் நாடு புத்தனாறு, தோவாளை கால்வாய்கள் பிரதான கால்வாய்களாக உள்ளன. இவற்றின் கடைவரம்பு பகுதிகள் புதுக்கடை, ஆலஞ்சி கிளை கால்வாய்கள், மருதூர்குறிச்சி, திக்கணங்கோடு கால்வாய்கள், சேரமங்கலம் மேஜர் - மைனர் கால்வாய்கள், ராஜாக்கமங்கலம், முட்டம், காரவிளை சம்பக்குளம், ஆசாரிபள்ளம் கால்வாய்கள், கொட்டாரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் செல்லும் கால்வாய்கள், மருத்துவாழ்மலை கிளை கால்வாய் மற்றும் தோவாளை சானலின் கிளை கால்வாய்கள் கடைவரம்பு வரை தண்ணீர் கொண்டு செல்கின்ற கால்வாய்கள் ஆகும்.

தற்போது மழைக்காலம் என்பதால் தண்ணீர் மழை வெள்ளத்துடன் சேர்ந்து கடைவரம்பு வரை செல்கிறது. டிசம்பர் மாதத்திற்கு பின்னர் தண்ணீர் விநியோகம் பெரும் சவாலாக இருக்கும். எனவே மீண்டும் புல்புதர்கள் நிரம்பிய பகுதிகளை கண்டறிந்து தூர்வாரி கும்பப்பூ சாகுபடியில் விளைச்சல் பெருகிட மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக குமரி மாவட்ட பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ கூறுகையில், கும்பப்பூ அறுவடை பணிகள் நிறைவு பெற பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை ஆகலாம். பொதுவாக கடைவரம்பு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகுவது வழக்கம். இந்த முறை அணைகளில் போதிய அளவில் நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் தீவிரமாக பயிர் செய்து வருகின்றனர். அவர்களுக்கு முழுமையாக விளைச்சல் கிடைக்க கடைவரம்பு பகுதிகள் வரை கால்வாய்களை சீர் செய்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். ஏற்கனவே முறையாக தூர்வாரப்படாத கால்வாய்களையும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் சீர் செய்து தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்’  என்றார்.

Tags : Aquarius, cultivation
× RELATED சட்டமன்ற நிகழ்வு நேரலை வழக்கு ஒத்திவைப்பு