×

மழையின் காரணமாக வெள்ளம்: அமிர்தி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

வேலூர்: மழையின் காரணமாக வெள்ளம் வருவதால் அமிர்தி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் அருகே உள்ள அமிர்தி வன உயிரின பூங்காவில் கொட்டாறு நீர்வீழ்ச்சி உள்ளது. வன உயிரியல் பூங்காவுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கொட்டாறு நீர்வீழ்ச்சியை பார்க்க சென்று வருகின்றனர். இதில் சிலர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். மேலும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள வழுவழுப்பான பாறை மீதும் வாலிபர்கள் ஏறிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வேலூரில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நீர்வீழ்ச்சியில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அமிர்தி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கடந்த வாரம் அமிர்தி பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தீபாவளி மற்றும் விடுமுறை தினங்களில் அதிகளவில் சுற்றலா பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் மழைகாலத்தில் கொட்டாற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் கொட்டாற்று நீர்வீழ்ச்சி உள்ள வனப்பகுதிக்குள் யாரும் செல்லாதபடி முள்வேலிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாக தற்போது, ெகாட்டாறு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் நீர்வீழ்ச்சி உள்ள பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் முள்வேலி அமைத்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக அமிர்தி நீழ்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்க அமிர்தி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Floods , Rain, tourism
× RELATED மிக்ஜாம் புயல், தென் மாவட்ட...