×

அயோத்தியாப்பட்டணம் பகுதியில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

அயோத்தியாப்பட்டணம்: தொடர் மழை எதிரொலியால், அயோத்தியாப்பட்டணத்தில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் வருவாயிழந்து தவிக்கின்றனர். சேலம் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில், 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இதில் 3500க்கும் மேல் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கொரோனாவால் கட்டுமான தொழில் முழுவதும் முடங்கியது. இதனால், கட்டுமான பொருட்கள் விற்பனை அடியோடு சரிந்தது. கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல், செங்கல் சூளை உரிமையாளர்களும் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து, முடங்கி கிடந்த கட்டுமான பணிகள், 7 மாதத்திற்கு பிறகு துவங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், இடைப்பாடி, வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் உற்பத்தி பணி தீவிரமாக நடைபெறத் தொடங்கியுள்ளது. இதனிடையே, கடந்த ஆவணி மாதத்தில் ஏராளமானோர், புதிதாக வீடு கட்டுவதற்கு பூமி பூஜை போட்டனர். இதையடுத்து கட்டுமான தொழில் மீண்டும் சுறுசுறுப்படைய தொடங்கியது.

மேலும், செங்கல் சூளைகளில் உற்பத்தி முழு வீச்சில் தொடங்கியது. ஆனால், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, மீண்டும் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதியில், செங்கல் உற்பத்தி பணி, வெகுவாக முடங்கியுள்ளது. இதனால், சூளை தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : area ,Ayodhya , Rain, brick
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...