×

பவானிசாகரில் ஊருக்குள் நுழையும் ஒற்றை யானையை கண்காணிக்க 4 தனிப்படை அமைப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை அருகே ஊருக்குள் நுழையும் ஒற்றை யானையை கண்காணிக்க 20 பேர் கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள காராச்சிக்கொரை வனப்பகுதியில் இருந்து தினமும் மாலை நேரத்தில் வெளியேறும் ஒற்றை யானை அணை முன்புறம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழத்தோட்ட நுழைவு வாயில் கேட்டை திறந்து அப்பகுதியிலுள்ள புங்கார், பெரியார் நகர், காராச்சிக்கொரை உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இரவு நேரத்தில் யானை அட்டகாசம் செய்து வந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஒற்றை யானை புங்கார் கிராமத்திற்குள் புகுந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதி கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது 20 பேர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பவானிசாகர் வனச்சரக அலுவலர் மனோஜ்குமார் கூறியதாவது: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் அருண்லால் அறிவுரையின் பேரில், பவானிசாகர் அணை அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யானையை கண்காணிப்பதற்காக வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் இந்த தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர். பகல் நேரத்தில் வெளியேறும் ஒற்றை யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக தனிப்படை தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

Tags : town ,Bhavani Sagar , Elephant, personal
× RELATED பொறுப்பேற்பு