×

சட்டமன்ற தேர்தலில் 50 சீட் கேட்க அமித்ஷா வருகை இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நாளை அவசர ஆலோசனை: பாஜவின் கோரிக்கையை அதிமுக ஏற்குமா?

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக சீட் கேட்டு நெருக்கடி கொடுப்பதற்காக அமித்ஷா வருகிற 21ம் தேதி சென்னை வருகிறார். பாஜவின் கோரிக்கையை அதிமுக ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்த இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் சென்னையில் அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.தமிழகத்தில் 2021ல் சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில், அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட் கேட்டு இப்போதே நெருக்கடி கொடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜ தலைவர்கள் கூறும்போது, பாஜ தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், பாஜ தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்றும் கூறி வருகின்றனர்.பாமக நிறுவனர் ராமதாசும், அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தினசரி அறிக்கை கொடுத்து வருகிறார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்காவிட்டால், போராட்டம் நடத்தப்போவதாக கூறியுள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும், தேமுதிக தனித்து போட்டியிடவே விரும்புகிறது.

அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து டிசம்பர் அல்லது ஜனவரியில் நடைபெறும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறி வருகிறார். இப்படி, அதிமுகவில் அதிக சீட்களை பெற கூட்டணி கட்சிகள் தினசரி அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா வருகிற 21ம் தேதி (நாளை மறுதினம்) தமிழகம் வருகிறார். அவர், சென்னை கலைவாணர் அரங்கில் அன்று மாலை 4.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் ₹380 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார் என்றும், ₹61,843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.அதன்படி தமிழக அரசு திட்டங்களை தொடங்கி வைக்க அமித்ஷா வருகிறார் என்றாலும், முக்கியமாக வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதாவது மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 60 தொகுதிகளில் பாஜ போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. அதில் 50 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி கூட குறையக்கூடாது என்று தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுவதற்காகவே அமித்ஷா சென்னை வருகிறார் என்று தமிழக பாஜ தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இதுபற்றி தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் இரண்டு நாட்களுக்கு முன் கூறும்போது, `அமித்ஷா 21ம் தேதி தமிழகம் வருகை ஆளுங்கட்சிக்கு (அதிமுகவுக்கு) ஒரு பயத்தை ஏற்படுத்தும்’ என்று கூறினார். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பாஜ தலைவர் அமித்ஷா தமிழகம் வருவது, அதிமுக தலைவர்களை சந்தித்து, சட்டமன்ற தேர்தலில் சீட் கேட்பதற்கே என்று கூறப்படுகிறது. பாஜ தலைமை 60 இடங்களை கேட்டு, இறுதியில் 50 இடங்கள் வரை போட்டியிட ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. இது அதிமுக மூத்த நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் வருகிற 20ம் தேதி (நாளை) சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் 20ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

21ம் தேதி அமித்ஷா வரும் சூழ்நிலையில், 20ம் தேதி அதிமுக முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில், “2021ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜ 60 இடங்களை கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நெருக்கடியை சமாளிப்பது எப்படி, பாஜ கேட்கும் இடங்களை கொடுப்பதா, வேண்டமா, பாஜவுக்கு அதிகபட்சம் எவ்வளவு சீட் கொடுக்கலாம் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படியே, 21ம் தேதி அமித்ஷாவை சந்திக்கும்போது அதிமுகவின் முடிவை அவரிடம் தெரிவிக்கவும் அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.2021ம் ஆண்டுமே மாதம் தமிழகத்தில்நடைபெறும் சட்டமன்றபொதுத்தேர்தலில்
பாஜ 60 இடங்களை கேட்டுஅதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது



Tags : visit ,Amit Shah ,Assembly ,AIADMK ,BJP ,emergency consultation , Amit Shah visits to ask for 50 seats in Assembly elections EPS, led by OBS Urgent consultation tomorrow: Will AIADMK accept BJP's demand?
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...