கனமழையால் திடீர் மண்சரிவு தண்டவாளத்தில் பாறை தப்பியது வைகை

சின்னாளபட்டி: கொடைரோடு அருகே மண் சரிவால் ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு கிடந்தன. இன்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால், மதுரையில் இருந்து சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை புறப்பட்டது. காலை 7.45 மணியளவில், திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு - அம்பாத்துரை இடையே முருகம்பட்டி குகை பாதையில் ரயில் சென்று கொண்டிருந்தது.

 அப்போது இன்ஜின் டிரைவர் சுரேஷ், ரயில்வே தண்டவாளத்தில் 100 அடி தூரத்தில் பாறைகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், உடனடியாக ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். தகவலின்பேரில் ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள், போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சுமார் 300 கிலோ கொண்ட பெரிய பாறை மற்றும் சில சிறிய பாறைகளை கடப்பாறை கொண்டு அகற்றினர். பாறைகளை அகற்ற பயணிகளும் உதவி செய்தனர். அதன்பின் 9 மணியளவில் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் ஒரு மணி நேரம் அவதியடைந்தனர். இன்ஜின் டிரைவர் திறமையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மழையால் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையே முருகம்பட்டி குகை பாதையை வழக்கமாக ஆய்வு செய்யும் 2 பேர், நேற்று மழையால் ஆய்வு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories:

>