மதுரை உட்பட பல மாவட்டங்களில் கனமழை 10 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது

* 4,100 ஏக்கரில் பயிர்கள் மூழ்கின * வீடுகள் இடிந்தன; சாலைகள் துண்டிப்பு

மதுரை: மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 4,100 ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின.

 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் இருந்து, நேற்று காலை வரை தொடர்மழை பெய்தது. இதனால் பேரையூர், உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் வெள்ள நீர் தேங்கின.ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது, சாயல்குடி அருகே தூத்துக்குடி மாவட்டத்தை ஒட்டிய பகுதியிலிருந்து பெருக்கெடுத்த மழைநீர் இப்பகுதி நீர்நிலைகளுக்கு வந்தது. இதனால் நீர்நிலைகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், கொண்டுநல்லான்பட்டி, வி. சேதுராஜபுரம், உச்சிநத்தம் சாலைகள் துண்டிக்கப்பட்டு,  போக்குவரத்து முழுமையாக தடைபட்டது.

முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையில் இருந்த 3 ஊரணிகளில் உடைப்பு ஏற்பட்டு, கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இங்கு 4 வீடுகள் சேதமடைந்தன. 1,250 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. மேலும் கொண்டுநல்லான்பட்டி, வி.சேதுராஜபுரம், உச்சிநத்தம் உள்ளிட்ட  கிராமங்களில் 2,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் பயிர் தண்ணீரில் மூழ்கியது. கல்லோடை ஓடை, மலட்டாறு பிரிவு கால்வாய் போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் விவசாய பணிகளுக்கு சென்ற  இரு பெண்கள் தண்ணீரில் சிக்கிக் கொண்டனர். இரவாகியும் வீடு திரும்பாத இவர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக நேற்று காலை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல முல்லைப்பெரியாறு மற்றும் கொட்டக்குடி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது. 3 ஆறுகளும் குன்னூர் பகுதியில் சங்கமித்து வைகை அணையை வந்தடைந்தன. நேற்று 5 ஆயிரத்து 5 கனஅடியாக உயர்ந்தது. இதையடுத்து ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா முழுவதும் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை தொடர் மழை பெய்தது. இதனால் ராமசாமியாபுரத்தில் இருந்து கான்சாபுரம் செல்லும் பகுதியில் உள்ள வயல்களில் 50 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. ஊட்டியில் குளிருக்கு ஒருவர் பலி: ஊட்டியில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிர் நிலவுகிறது. இந்நிலையில், ஊட்டி மேரிஸ்ஹில் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் (53) என்பவர், நேற்று முன்தினம் இரவு லோயர் பஜார் பகுதியில் ஒரு கடை முன் தூங்கியுள்ளார். குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் அவர் உயிரிழந்தார். நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 3வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடனாநதி அணை, ராமநதி அணைகள் நிரம்பின. அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சீவலப்பேரிகுளம் 2 இடங்களில் உடைந்து விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் 300 ஏக்கர் வாழை-நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.டெல்டா: டெல்டா மாவட்டத்தில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. 2 வீட்டின் சுவர் இடிந்து சேதமானது. மழைநீருடன் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஒரே நாளில் 10 செமீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல மாதங்களுக்கு பிறகு கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிந்தது.

அப்பகுதியில் உள்ள கடைகளில் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி மதகுகளை திறந்து விட்டதால், உபரி நீர் வெளியேறி வருகிறது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பியர் சோழா அருவி உள்ளிட்ட மற்ற அருவிகளும் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. கொடைக்கானல் - வத்தலக்குண்டு பிரதான சாலையில் விழுந்த மரம். டைகர் சோலை பகுதியில் விழும் நிலையில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலத்தில் கடந்த மூன்று தினங்களாக பகல் வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் நேற்று முன்தினம் மாலை வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. 1992ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு பிறகு 28 ஆண்டுகள் கழிந்த நிலையில் அதனை நினைவுபடுத்தும் விதமாக வெள்ளப்பெருக்கு அபாயகரமாக தோன்றியது. இரவில் வெள்ளம் மேலும் அதிகரித்து பாலத்தின் மீது தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Related Stories:

>