×

மருத்துவ கவுன்சலிங் தொடங்கியது

* அரசுப் பள்ளி மாணவர்கள் 262 பேர் பங்கேற்பு * 235 இடங்கள் நிரம்பியது

சென்னை: தமிழகத்தில்  அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில்  4,981 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,760 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. இந்நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வந்த 23,707 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. 7.5சதவீத இட ஒதுக்கீட்டுக்காக 972  மொத்த விண்ணப்பம் பெறப்பட்டு 951 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது.இதையடுத்து சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று கவுன்சலிங் தொடங்கியது. முன்னதாக  மாணவர்களுக்கு  கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% ஒதுக்கீட்டுடின் கீழ் தகுதி பெற்றவர்களுக்கு கவுன்சலிங் நடந்தது. நேற்று,  7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி 270 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட நிலையில் 262 பேர் கலந்துகொண்டனர்.  

காலை 9 மணிக்கு, தரவரிசைப் பட்டியலின்படி 151 வரை இடம்  பிடித்துள்ள (கட்ஆப் 249 வரை) மாணவர்கள் கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு  செய்தனர். அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு 152 முதல் 267 வரை உள்ள(190  கட்ஆப் பெற்றவர்கள்) மாணவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்றனர். மாணவர்கள் கணினி முன் நின்றவுடன் அவர்களது முகம் கணினி திரையில் தெரியும். அதே  திரையில் விண்ணப்பத்தில் உள்ள புகைப்படம் தெரியும். இரண்டையும் கவுன்சலிங் அலுவலர் சரிபார்த்த பின்னரே மாணவர்கள் கவுன்சலிங்கில் அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய கவுன்சிலிங் முடிவில், அரசு மருத்துவ கல்லூரிகளில் 224 இடங்கள், சுயநிதி மருத்துவகல்லூரிகளில் 4 இடங்கள், அரசு பல்மருத்துவ கல்லூரிகளில் 7 இடங்கள் என மொத்தம் 235 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் காத்திருப்போர் பட்டியலில் 27 பேர் உள்ளனர்.

மளிகை கடை ஊழியர் மகனுக்கு அட்மிஷன்
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த மளிகை கடை ஊழியர் செந்தில்குமாரின் மகன் ஹரிகிருஷ்ணனுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்துள்ளது. அவர் இந்த ஆண்டு பிளஸ்2 முடித்தவர். முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் 423 மதிப்பெண்கள் பெற்று 38வது ரேங்க் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள முன்னணி அரசு கல்லூரியில் இவருக்கு இடம் கிடைத்தது. மேலும் அவர் தந்தை செந்தில்குமார் கூறுகையில், எங்கள் குடும்பத்திலேயே முதல் மருத்துவர் என் மகன் தான். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 7.5% இட ஒதுக்கீடு காரணமாகவே இந்த இடம் கிடைத்தது என்றார்.


Tags : Medical counseling began
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...