×

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக 14,144 ஏரிகளில் 779 ஏரிகள் நிரம்பின: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக மொத்தமுள்ள 14,144 ஏரிகளில் தற்போது 779 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறினார்.இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை, எழிலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை பாதுகாத்து, சேமித்து வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 36 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப தேவையில்லை. சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள நீர், உபரி நீர் வெளியேற்றம், அணைகளின் தற்போதைய நீர் நிலவரம் உள்ளிட்ட தகவல்களை அரசு சார்பில் வெளியிடப்படும் தகவல்களை மட்டும் மக்கள் முழுமையாக நம்ப வேண்டும்.

தற்போது மாநிலத்தில் உள்ள பாசன ஏரிகள் அரியலூர் மாவட்டம் தொடங்கி விருதுநகர் மாவட்டம் வரை 14,144 ஏரிகளில் தற்போது 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குறிப்பாக, 9,529 பாசன ஏரிகளில் 714 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கடலோர மாவட்டங்களாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் இதில் 578 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. குன்றத்தூர் பகுதியில் 20 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் பகுதியில் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் 20 வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. தற்போது அங்கும் வெள்ள நீர் குறைந்துள்ளது. அனைத்து அணைகள், ஏரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளன. தற்போது, தென்தமிழகத்தில்தான் மழை பொழிவு இருக்கும் என்று வானிலை எச்சரித்துள்ளது. தற்போது மழை காரணமாக 31 வீடுகள் முழுமையாகவும், 213 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. தமிழகத்தில் மழை காலங்களில் உயிரிழப்பே இல்லாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்
செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் குறித்து பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வந்துகொண்டே இருக்கிறது. இந்த ஏரியை பொறுத்தவரை மேல் பகுதியில் உள்ள பெரும்புதூர் ஏரி தற்போது 87 சதவீதம் நிரம்பியுள்ளது. இதை சுற்றியுள்ள 3 ஏரிகள் நிரம்பும்போது, அந்த தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்தடையும். செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2.9 டிஎம்சி நீர் நிரம்பியுள்ளது. அதன் முழு கொள்ளளவு 3.6 டிஎம்சி.

மிதமான மழை பெய்தாலும், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது அடையாற்றில் குறைந்தளவு நீர்தான் வெளியேற்றப்படும். ஆதனூர், சோமங்கலம், மணிமங்கலம் ஏரிகளில் இருந்து அடையாற்றில் தண்ணீர் வெளியேற்றினாலும் அனைத்து சூழ்நிலை களையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்தாலும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

Tags : lakes ,Udayakumar ,Tamil Nadu ,monsoon , Due to the northeast monsoon in Tamil Nadu In 14,144 lakes 779 lakes filled: Minister Udayakumar informed
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை