×

அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே 7.5% ஒதுக்கீடு ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: மருத்துவ கல்வியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் முழுமையாக படித்த மாணவர்களுக்குத்தான், ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம்,  பட்டுக்கோட்டை அருகே பள்ளிஓடவயல் கிராமத்தை சேர்ந்த அறிவழகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகள் அறிவிகா. நாவக்கொல்லையிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம்  வகுப்பு வரை படித்தார். அங்கு மேல்நிலைப்பள்ளி இல்லாததால், புனவாசலில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார். பின்னர் பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தார். 10ம் வகுப்பில் 467 மதிப்பெண் பெற்று தமிழக அரசின் காமராஜர் விருது பெற்றார். பிளஸ் 2வில் 453 மதிப்பெண் பெற்றுள்ளார். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தால் நீட் தேர்வில் பங்கேற்றார். இதில் 270 மதிப்பெண் ெபற்றார்.

தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின்படி என் மகளுக்கு மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே உள்இடஒதுக்கீடு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், 6ம் வகுப்பு மட்டும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துள்ளதால், சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, என் மகள் 6ம் வகுப்பு படிப்பையும் அரசுப் பள்ளியில் படித்ததாக கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலில் என் மகளின் பெயரை சேர்க்கவும், அவருக்காக ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முழுமையாக அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும். மனுதாரரின் மகள் 6ம் வகுப்பை அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துள்ளார். எனவே, அவர் உள்இட ஒதுக்கீடு சலுகையை கோர முடியாது’’ என்றார்.இதையடுத்து நீதிபதிகள், அரசாணைப்படி, 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு என்பது முழுமையாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கானது. இதை மனுதாரர் உரிமை கோரமுடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.  



Tags : government school ,school ,class , 7.5% quota only if studying in government school Can't claim ownership even if a class attends another school: Icord Branch Action Order
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...