×

முன்னாள் எம்எல்ஏ மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கை: வாழ்நாளெல்லாம் எளிமையையும் நேர்மையையும் கடைபிடித்த பண்பாளர், பத்மநாமபுரம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் முகமது இஸ்மாயில்  மறைவு அரசியல்  பொதுவாழ்வுக் களத்தில் பேரிழப்பாகும். குளச்சல் முஸ்லிம் சமூகத்தின் முதல் பட்டதாரி, அதுவும் முதுகலை பயின்ற சட்டப் பட்டதாரி என்ற பெருமைக்குரியவர்.அவர், ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் அங்கம் வகித்து, 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் பொதுத்தொண்டாற்றியவர்.

பல பிரதமர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தும்கூட, தக்கலை நகரில் ஒரு வாடகை வீட்டில் மிக எளிமையாகவே வாழ்ந்த பெருந்தகையாளர் அவர். தூய்மையும் தொண்டறமும் கொண்ட முகமது இஸ்மாயில் பொதுவாழ்வுப் பணியைப் பாராட்டி, “கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் கல்வி அறக்கட்டளை” இவருக்கு, “அரசியல் நேர்மையாளர்” எனும் விருது வழங்கி சிறப்பித்தது. எளிமையின் சின்னமாக நேர்மையின் சிகரமாக அனைத்துத் தரப்பு மக்களின் அன்பிற்குரியவராக விளங்கிய முகமது இஸ்மாயில் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : death ,MK Stalin ,MLA , The demise of a former MLA MK Stalin Mourning
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...