×

800 கோடி மாயமான விவகாரம் அமைச்சர் துரைக்கண்ணு இறந்த பின் மூட்டை, மூட்டையாக கைமாறிய பணம்: கான்ட்ராக்டர், முருகனின் கூட்டாளியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை: தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம், மாவட்டத்தில் தொகுதிகளை பலப்படுத்த ஆளும்கட்சி 800 கோடியை கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், துரைக்கண்ணுவும், மகன் ஐயப்பனும் ₹5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்களை பினாமிகள் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் திடீரென இறந்ததால் இந்த பணம், சொத்து என்ன ஆனது என்பது தெரியாமல் ஆளும்கட்சியினர் திணறினர்.இந்த பணம், சொத்துக்கள் பற்றி ஐயப்பன் வாய்திறக்காததால் அவர்களுக்கு நெருக்கமானவரும், துரைக்கண்ணுவின் பினாமிகள் என்று கூறப்படும் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவரான பாமகவை சேர்ந்த பெரியவன் (எ) முருகன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து கோடிகள் பற்றி போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

துரைக்கண்ணு இறப்பதற்கு முன் கும்பகோணம் காளிமுத்து நகரில் பினாமி பெயரில் ₹55 லட்சத்துக்கு ஒரு வீட்டை ஒரே செட்டில்மென்ட்டில் வாங்கியுள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது அந்த வீட்டில் மராமத்து பணிகள் நடந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன் இந்த வீட்டிலிருந்து நள்ளிரவு 4 கார்களில் வந்த கும்பல் மூலம் 4 மூட்டைகள் எடுத்துசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர் இந்த வீட்டில் பணத்தை மூட்டைகளில் வைத்திருக்கலாம், அந்த பணத்தைதான் அவர்கள் பேக்குகளில் எடுத்துசென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதேபோல் துரைக்கண்ணு கடைசியாக சென்னை புறப்பட்டபோது கபிஸ்தலம் சுற்றுலா மாளிகையில் வைத்து அமைச்சர் சார்பில் 3 பேர் குடந்தை ஒன்றிய பொறுப்பாளரிடம் 3 மூட்டைகளில் பணத்தை கொடுத்துள்ளனர். அந்த பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

போலீசார் தொடர் விசாரணையில் திருவிடைமருதூர் ஒன்றிய பொறுப்பாளரிடமிருந்து 800 கோடியில் இதுவரை 40 சதவீத பணம் மீட்கப்பட்டு, கொங்கு மண்டலத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரின் முழு பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தொடர்ந்து, அமைச்சரின் பினாமிகள், நெருக்கமானவர்களை கும்பகோணத்தில் வைத்து விசாரித்தால் பரபரப்பாகும் என்பதால் போலீசார் அரியலூர் பகுதிக்கு அழைத்து சென்று ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய மண்டல ஐஜி குடந்தை பகுதிக்கு அடிக்கடி சென்றுவருகிறாராம். இதனால் ஐஜியும் ரகசியமாக விசாரித்து வருகிறார் என கூறப்படுகிறது. இதனால் அமைச்சரின் பினாமிகள், ஆதரவாளர்கள் கிலியில் உள்ளனர்.



Tags : Durakkannu ,death ,Contractor ,Murugan , 800 crore magical affair Money handed over in bundles after Minister Durakkannu's death: Police arrest contractor, Murugan's accomplice
× RELATED சட்டவிரோதமாக அரசியல் கட்சிகளுக்கு...