சீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம்

புதுடெல்லி: சீனாவின் எல்லைக்குள் லடாக் நகரம் இடம் பெற்றுள்ளது போல் வரைபடம் வெளியிட்டதற்காக டிவிட்டர் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், லடாக்கின் தலைநகரமாக லே நகரம் உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி டிவிட்டர் வெளியிட்ட சீனாவின் வரைப்படத்தில், லே நகரம் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிவிட்டரின் இந்த செயலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.  இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, டிவிட்டரின் இந்திய தலைமை நிர்வாகிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் மீனாட்சி லேகி முன்னிலையில்,  விசாரணைக்கு ஆஜரான டிவிட்டர் நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத கூட்டுக்குழு, ‘இது கிரிமினல் குற்றம். இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுப்பது போல் உள்ளது. எனவே, எழுத்து மூலமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது செயலுக்கு டிவிட்டர் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.

கடித விவரம்

மன்னிப்பு கடிதத்தில் டிவிட்டர் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘‘ஜியோ டேக்கிங் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தவறு நிகழ்ந்துள்ளது. நவம்பர் 30ம் தேதிக்குள் இந்த தவறு சரி செய்யப்படும். இந்தியர்களின் உணர்வுகள் காயப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறோம்’ என்று கூறியுள்ளது.

Related Stories:

>