×

28 ஆண்டுகளுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு

தென்காசி: குற்றாலத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி பகுதிகளில் கட்டிடங்கள் சேதம் அடைந்தது. மூன்றாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. குற்றாலத்தில் கடந்த மூன்று தினங்களாக பகல் வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் நேற்று மாலை வெள்ளப்பெருக்கு அதிகரித்து பாதுகாப்பு வளைவு, பாலம் ஆகியவற்றை தாண்டி ஆற்றின் மீது நேரடியாக தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியது.

92-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு பிறகு இருபத்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது அதனை சற்று நினைவுபடுத்தும் விதமாக நேற்றைய வெள்ளப்பெருக்கு அபாயகரமாக தோன்றியது. இரவில் வெள்ளம் மேலும் அதிகரித்து பாலத்தின் மீது தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. தண்ணீரும் செம்மண் நிறத்தில் கலங்கலாக விழுந்தது. பழைய குற்றாலத்திலும் படிக்கட்டுகள் மற்றும் கார் பார்க்கிங் பகுதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. ஐந்தருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் சன்னதி பஜார் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து தண்ணீர் அண்ணா சிலை ஆற்றுப் பாலத்தை மூழ்கடித்து ஆற்றில் கலந்தது. இதையடுத்து இரவு தென்காசி கலெக்டர் சமீரன், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சென்று வெள்ளைப் பகுதிகளை பார்வையிட்டார். அருவி பகுதிக்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நள்ளிரவு சமயத்தில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்து வெள்ளத்தில் வனப்பகுதியில் கிடந்த சில மரத்தடிகள் அடித்து வரப்பட்டது. ஐந்தருவியில் பாறை ஒன்று விழுந்தது. பழைய குற்றாலத்தில் பாறையின் மீது கட்டப்பட்டிருந்த கழிப்பறை கட்டிடத்தின் தரைப்பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மெயின் அருவி பெண்கள் உடை மாற்றும் அறை வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டிடம் இடிபாடுகள் குற்றாலநாதர் கோவிலுக்குச் செல்லும் பாலம் வரை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அருவிப் பகுதிகள் மற்றும் பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த டைல்ஸ் தரைகள் சேதமடைந்தன. அருவிக்கரை பகுதி முழுவதும் கட்டிட இடிபாடுகளும் மர கட்டைகளும் சிதறிக் கிடந்தது. காலையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலையில் பெரும் வெள்ளப்பெருக்கு சற்று கட்டுக்குள் வந்தது.

மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டுகிறது. இரவு முழுவதும் கலங்கலாக விழுந்த தண்ணீர் காலையில் தெளிவடைந்து வென்மை நிறமாக விழுந்தது. மொத்தத்தில் நேற்றைய வெள்ளப்பெருக்கு 92 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் சேதத்தை லேசாக நினைவூட்டுவதாக இருந்தது. தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 81 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆயக்குடியில் 60 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 48 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 71 மில்லி மீட்டரும், சிவகிரியில் 81 மில்லி மீட்டரும், தென்காசியில் 72 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

அணைக்கட்டுகளைப் பொருத்தவரை குண்டாறு அணை கட்டில் அதிகபட்சமாக 99 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடனாநதி அணைக்கட்டு பகுதியில் 73 மில்லி மீட்டரும், ராமநதி அணைக்கட்டு பகுதியில் 95 மில்லி மீட்டரும் , கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் 62 மில்லி மீட்டரும் , அடவிநயினார் அணைக்கட்டுப் பகுதியில் 58 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

Tags : Courtallam ,flooding , Tenkasi
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!