×

களக்காடு பகுதியில் தொடர் மழை: நாங்குநேரியான் கால்வாயில் உடைப்பு

களக்காடு: களக்காடு அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் களக்காட்டில் ஓடும் ஆறு, கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோல களக்காடு நாங்குநேரியான் கால்வாயிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று இரவில் பெய்த தொடர் மழையால் கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனைதொடர்ந்து களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியபுரத்தில் இன்று அதிகாலையில் நாங்குநேரியான் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது, உடைப்பின் வழியாக வெளியேறி வெள்ளம் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது. விளைநிலங்களை கடந்து வெள்ளம் சுந்தரபாண்டியபுரம் ஊருக்குள் புகும் அபாயம் நிலவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி தாசில்தார் நல்லையா உத்தரவின் பேரில், கிராம நிர்வாக அதிகாரி நரேஷ் கெளதம் உள்பட வருவாய் துறையினரும், பொதுப்பணித்துறையினரும் அங்கு சென்று உடைப்பை பார்வையிட்டனர். அதன் பின்னர் நாங்குநேரியான் கால்வாயின் வரும் தண்ணீரை ஷட்டரை திறந்து வேறு கால்வாய்களில் திருப்பி விட்டனர். இதையடுத்து  நாங்குநேரியான் கால்வாயில் வெள்ளம் தணிந்தது. இதனால் விளைநிலங்களில் புகுந்த வெள்ளம் வடிந்தது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையில் சுந்தரபாண்டியபுரம் ஊருக்குள் வெள்ளம் புகாமல் தடுக்கப்பட்டது. மேலும் கால்வாய் உடைப்பை சீரமைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : area ,Kalakadu ,Nangunerian , Kalakadu, rain
× RELATED களக்காடு அருகே பைக்குகள் திருட்டு