×

செய்யாறு அருகே சோழர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செங்காடு கிராமத்தில் செங்கையம்மன் கோயில் மதில் சுவற்றின் அருகே வண்ண சுண்ணாம்பு பூசப்பட்ட நிலையில் கொற்றவை சிலையை தொல்லியல் ஆர்வலரும், வரலாற்று ஆய்வாளருமான ஆசிரியர் எறும்பூர் கை.செல்வகுமார் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பண்டைய தமிழகத்தில் கொற்றவை எனும் துர்க்கை வழிபாடு இருந்ததற்கு வரலாற்று சான்றுகள் பல உள்ளன. நாட்டை ஆண்ட அரசன் கொற்றவன் என்றும், வெற்றி தருபவள் கொற்றவை ஆவாள். போர் தெய்வமாகிய கொற்றவைக்கு சோழ மன்னர்கள் போருக்கு செல்லும் முன் வாள், வளரி, ஈட்டி உள்ளிட்ட போர் ஆயுதங்களை வைத்து படையல் இட்டு வழிபட்டு போருக்கு சென்று வந்துள்ளனர்.

அந்த வகையில் இந்த கொற்றவை சிலையை துர்க்கை, காளி, அம்மன் என்று அழைக்கின்றனர். இந்த சிலை கி.பி 9ம் நூற்றாண்டு முதல் கி.பி 11ம் நூற்றாண்டு வரையான இடைப்பட்ட காலகட்டத்தில் சோழர் காலத்தில் செதுக்கப்பட்டு இருக்கலாம். இதே கால கட்டத்தில் செதுக்கப்பட்ட கொற்றவை சிலை ஒன்று எறும்பூர் பாஞ்சாலியம்மன் கோவில் அருகில் திறந்த வெளியில் உள்ளது. தமிழில் கொற்றவையே தொன்மையான தெய்வம். இந்த சிலை அழகிய முகத்துடன் எட்டு கரங்களுடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, கேடயம், வாள், வளரி, ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அபயகர முத்திரையுடன் எருமையின் தலையில் மேல் நின்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சிலை காணப்படுகிறது.

இதே காலகட்டத்தில் ஆயிரமாண்டு ஒரே பெயரில் இருக்கும் எழும்பூர் ராஜராஜன் சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு, சோழர் காலத்தில் பட்டீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே சோழர் காலத்து கொற்றவை சிலையாக இருக்குமோ என கருத வேண்டியுள்ளது. மேலும் செங்காடு காத்த அம்மன் நாளடைவில் செங்காத்தம்மனாக மாரி அக்கா, தங்கை என சின்ன செங்காடு, பெரிய செங்காடு என வெவ்வேறு இடங்களில் வழிபாட்டு தலமாக தொன்றுதொட்டு அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chola ,Seiyaru ,sculptor , seiyaru, statue discovery
× RELATED நுளம்பர் பாணி நுணுக்கத்தூண்கள்