இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரி: பேச்சிப்பாறை தீவுகளில் அத்துமீறும் இளைஞர்கள்

நாகர்கோவில்: பேச்சிப்பாறை அணை தீவுகள் மது அருந்தும் கூடங்களாக மாறிவருகிறது. இதனால் வனம் மற்றும் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இயற்கை வளம் கொஞ்சும் குமரியில் காளிகேசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. ஊட்டி கொடைக்கானலை மிஞ்சும் ரம்மியாக காட்சி அளிக்கும் பகுதிகளாக இவை உள்ளன. பேச்சிப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் ஏராளமான சிறு தீவுகள் உள்ளன. அணைகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தம் என்றாலும், அதன் நீர் பிடிப்பு பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆகவே இந்த பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. இந்த மலைகளில் வசிக்கும் காணி மக்கள் செல்ல மட்டும் படகு சேவை தனியார் மூலம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.10 முதல் ரூ.20 மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த நிலையில் காளிகேசம், பேச்சிப்பாறை அருகே இரட்டை அருவி, திற்பரப்பு அருவிகளில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் இயற்கையை ரசிக்க குமரி வரும் கேரள பயணிகள், இங்கு எஸ்டேட் வைத்துள்ள கேரள நண்பர்கள் மூலம் வனப்பகுதிக்குள் சென்று வருகின்றனர். காளிகேசம் பகுதியில் கோயிலுக்கு செல்வதற்கே ஆயிரம் தடைகள் போடும் வனக்காவலர்கள், இதுபோன்ற வசதி மிக்க பயணிகளை கண்டு கொள்வதில்லை. தற்போது பேச்சிப்பாறை அணையில், உள்ள தீவுகள் தான் கேரள மக்களின் விருப்ப சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு அணையில் தண்ணீர் குடிக்க வரும் மிளாக்கள் உள்ளிட்ட வன விலங்குகளை கண் குளிர கண்டு களிப்பதுடன், தீவுகளில் இறங்கி டென்ட் அமைத்து, சமையல் செய்து சாப்பிட்டும், சிலர் மது அருந்தியும் கும்மாளமிட்டு வருகின்றனர். சமையல் செய்வதற்காக காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டி பயன்படுத்துகின்றனர். இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது தவிர அணைகளில் படகுகளில் பயணம் செய்பவர்கள், லைப் ஜாக்கெட் போன்ற உயிர் காப்பு கவச உடைகள் எதுவும் அணிவதில்லை. காற்று அதிகம் அடிக்கும் நேரங்களில் படகுகள் கவிழும் அபாயம் உண்டு. இதனால் பாதுகாப்பு உபகரணங்களின்றி செல்லும் பயணிகள் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தாலும் ஒரு முறைக்கு ரூ.1200க்கு மேல் பணம் கிடைப்பதால் படகோட்டிகள் தயக்கம் காட்டாமல் பயணிகளை அழைத்து செல்கின்றனர்.

இவ்வாறு இங்கு வரும் பயணிகளை படகோட்டிகள் ஏதாவது ஒரு தீவில் இறக்கி விடுகின்றனர். இதில் கும்பலாக வரும் இளைஞர்கள் சமையல் செய்து சாப்பிடுவதுடன், மது அருந்தி விட்டு பாட்டில்கள் மற்றும் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர்களை அங்கேயே போட்டு விடுகின்றனர். இதனால் மண் வளம் பாதிப்பதுடன், பிளாஸ்டிக் கவர்களை வன உயிரினங்கள் உண்டு அவற்றின் உயிருக்கே ஆபத்தாக மாறும் நிலையும் உள்ளது.

சிலர் வனத்துறை உயர் அதிகாரிகளை கூட்டு சேர்த்து கொண்டு மிளா போன்றவற்றை வேட்டையாடி உண்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது. இதுபற்றி அகில இந்திய மக்கள் நலக்கழக மாநில துணைத் தலைவர் வக்கீல் சதீஷ் கூறியதாவது, குமரி மக்களுக்கு இயற்கை வழங்கிய மலைவாழ் சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்றது காளிகேசம். தற்போது இங்கு சாமானிய மக்கள் செல்ல முடியாத படி, சூழியல் பூங்கா என்ற பெயரில், முறைகேடாக சோதனை சாவடி அமைத்து, பணம் வசூல் ெசய்து வருகின்றனர். ஆனால், அதற்கு ஏற்ப எந்த வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை.

அப்பாவி மக்களை மலை அடிவாரத்திற்கே அனுமதிக்காத வனத்துறை அதிகாரிகள், கேரளாவை சேர்ந்த கும்பல்கள் மரத்தடிகளை வெட்டி கடத்துவதை மட்டும் ைக கட்டி வேடிக்கை பார்க்கின்றனர். ஏற்கனவே வனப்பகுதி அருகே காவல் நிலையங்களில் பணியாற்றியவர்கள், ரப்பர் கழக அதிகாரிகள் என பலரும் விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி மரத்தடிகளை வெட்டி சென்றதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

தற்போதும் இது தொடர்வதாக புகார்கள் வந்துள்ளன. சுற்றுலா பயணிகளை எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குடும்பத்துடனும் படகுகளில் அழைத்து செல்கின்றனர். இதுபற்றி புகார் தெரிவிக்க வனத்துறை அதிகாரியை சந்திக்க முயன்றாலும், அவரை சந்திக்க முடிவதில்லை. போனையும் எடுப்பதில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் வனத்துறையை கண்டித்து போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>