×

டெல்டாவில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பெரம்பலூர் அருகே 2 வீட்டின் சுவர் இடிந்து சேதம்

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் நேற்றும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இன்று காலை முதல் புதுக்கோட்டை, வேதாரண்யம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் அருகே மழையால் 2 வீடுகள் இடிந்தது. மின்னல் தாக்கி மாடு பலியானது. கரூரில் மழைநீருடன் கழிவுநீர் வீடுகளில் புகுந்ததால் 40 குடும்பத்தினர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்றிரவு விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலை வானம் வெறித்து காணப்பட்டது. வேதாரண்யத்தில் விடிய விடிய தூறல் மழை பெய்தது. இன்று அதிகாலையும் மழைபெய்தது. 10 ஆயிரம் மீனவர்கள் இன்று 8வது நாளாக கடலுக்கு செல்லவிலலை. மயிலாடுதுறை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்கிறது. தஞ்சையில் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை வெயில் அடித்தது. திருவையாறு, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இன்று காலையும் மழை பெய்து வருகிறது. மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்றனர். திருவாரூர் மாவட்டத்திலும் நேற்றிரவு பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. பொன்னமராவதியில் விடிய விடிய பெய்த மழை கொட்டியது. மாவட்டம் முழுவதும் இன்றுகாலையும் மழை பெய்து வருகிறது. மீன்வளத்துறை டோக்கன் வழங்கியதால் ஒரு வாரத்துக்கு பின் புதுக்கோட்டை மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். கரூர் மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. மழையால் தாந்தோணிமலையில் தாழ்வான பகுதிகளான சவுரிமுடித்தெரு, வடக்குத்தெரு, வஉசி தெரு மற்றும் வெங்கடேஸ்வரா நகர் 4வது தெரு போன்ற அனைத்து தெருக்களிலும் உள்ள குடியிருப்புகளில் மழைநீரும், சாக்கடை கழிவு நீரும் புகுந்து மக்கள் வெளியே செல்ல முடியாமலும், வீட்டுக்குள் இருக்க முடியாமலும் அவதிப்பட்டனர்.

வஉசி தெருவில் மழைநீர் மற்றும் கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் 40 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதேபோல் குளித்தலை, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் நேற்று 5வது நாளாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பெரம்பலூர் பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. வேப்பந்தட்டை தாலுகாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் வேப்பந்தட்டை அருகே வெண்பாவூர் ரங்காயி(60) என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் நேற்று இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதேபோல் வேப்பந்தட்டையை சேர்ந்த அழகுதுரை(50) என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.

மேலும் தாழைநகரை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் வெங்கலம் கிராம எல்லையில் நிலத்தில் உள்ள மரத்தடியில் பசுமாட்டை கட்டியிருந்தார். அப்போது மழையில் மின்னல் தாக்கி மாடு இறந்தது. இதுதொடர்பாக வெங்கலம் வருவாய் ஆய்வாளர் கவுரி விசாரித்து வருகிறார். தொடர் மழையால் வேப்பந்தட்டை பகுதிகளில் தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. அரும்பாவூர் பெரிய நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சியில் 2வது நாளாக நேற்றுமாலை மழை பெய்தது. அரை மணி நேரம் பலத்த மழை கொட்டியது. ெதாடர்ந்து விடிய விடிய விட்டு தூறல் மழை பெய்தது. ஜங்ஷன், மத்திய பஸ்நிலையம், சத்திரம் பஸ்நிலையம், ஸ்ரீரங்கம் கடைவீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கியது. பல இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருக்கள், சாலைகளில் ஓடியது. திருவெறும்பூர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இப்பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டதால் சாலை சேறும் சகதியுமானது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொன்மலை ஜி கார்னர் திடலில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு வியாபாரம் செய்யும் மொத்த வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். டெல்டா மாவட்டங்களில் சம்பா நடவு முடிந்துள்ள நிலையில் மழை பெய்ய துவங்கியுள்ளதால் சம்பாவுக்கு இந்த மழை ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags : Delta ,houses ,Wall ,Perambalur , Delta, Trichy, rain
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!