×

மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடர் மழை: 10 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது

மதுரை: தொடர் மழையால் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாயல்குடி அருகே 10 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 662 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்று பகலில் இருந்து இரவு வரை விட்டு, விட்டு மழை பெய்தது. நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை, பேரையூரில் 69 மில்லி மீட்டரும், கள்ளிக்குடியில் 48 மி.மீ, திருமங்கலத்தில் 44 மி.மீ, உசிலம்பட்டியில் 40 மி.மீ, மதுரை தெற்கு பகுதியில் 34 மி.மீ, தனியாமங்கலத்தில் 32 மி.மீ, தல்லாகுளத்தில் 27 மி.மீ, கள்ளந்திரியில் 26 மி.மீ, சிட்டம்பட்டியில் 29 மி.மீ, மாவட்டத்தில் மொத்தம் 615 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரி 30 மி.மீ ஆகும்.

மழைக்கு பேரையூர், உசிலம்பட்டி பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. வெளி வீதிகள், மாசி வீதிகள், கோரிப்பாளையம், செல்லூர், புதுஜெயில் ரோடு, பைபாஸ் ரோடு, மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல ரோடுகள் சேதமடைந்தன. வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு சாலைகளை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால்,  வெளியே வர முடியாமல் மக்கள், வீடுகளிலேயே முடங்கினர். இதனால் 6 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வீடு இடிந்தது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியில் பஜார் வீதியில் கூலித்தொழிலாளி ராஜேந்திரன் வீடு உள்ளது. தொடர் மழையால் வீட்டின் சுவர் ஈரப்பதத்துடன் இருந்தது. இன்று அதிகாலை 4.30 மணியளவில், திடீரென்று சுவர் இடிந்து விழுந்தது. மேற்கூரையும் கீழே விழுந்தது. தூங்கிக் கொண்டிருந்த 4 பேரும் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து தப்பினர். இன்று காலை வருவாய்த்துறையினர் சேதமான வீட்டை பார்வையிட்டனர். மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் 59.00 மி.மீ, சிவகாசி 92.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம்:  சாயல்குடி அருகே கொண்டுநல்லான்பட்டி, கொக்கரசன்கோட்டை, டி.கரிசல்குளம், வி. சேதுராஜபுரம், முத்துராமலிங்கப்புரம், உச்சிநத்தம் என தொடர்ச்சியாக 10 கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அப்பகுதியிலிருந்து பெருக்கெடுத்து ஓடி வந்த மழைநீர் இப்பகுதி நீர்நிலைகளுக்கு வந்தது. இதனால் நீர்நிலைகள் நிறைந்து உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொண்டுநல்லான்பட்டி, வி. சேதுராஜபுரம், உச்சிநத்தம் சாலை துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் இப்பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் மிளகாய் நாற்று நடப்பட்டது. வெள்ளப்பெருக்கால் வயல்களில் மிளகாய் நாற்றுகள் மூழ்கின.

முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை பகுதியில் கனமழை பெய்தது. இதனால் கல்லோடை ஓடை, மலட்டாறு பிரிவு கால்வாய் போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் விவசாய பணிகளுக்கு சென்ற ஈஸ்வரி(35), மீனாள்(55) என்ற இரு பெண்கள் கால்வாயை கடக்க முடியாமல் பரிதவித்தனர். இரவாகியும் வீடு திரும்பாததால் தேடி சென்ற உறவினர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் கயிறு கட்டி இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

கிடாத்திருக்கையில் இருந்த 3 ஊரணிகளில் உடைப்பு ஏற்பட்டு, கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் முத்துராமலிங்கம், வீரபத்திரன் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட 4 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தேனி மாவட்டத்தில் நேற்று காலை துவங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஆண்டிபட்டியில் 39 மிமீ, அரண்மனைப்புதூரில் 46 மிமீ, போடியில் 23மிமீ, கூடலூரில் 77 மிமீ, மஞ்சளாறு அணையில் 40 மிமீ, பெரியகுளத்தில் 50 மிமீ, பெரியாறு அணையில் 45 மிமீ, தேக்கடியில் 50 மிமீ, சோத்துப்பாறையில் 64 மிமீ, உத்தமபாளையத்தில் 72 மிமீ, வைகை அணையில் 32 மிமீ, வீரபாண்டியில் 50 மிமீ மழை பதிவாகியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக குன்னூர் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 49.74 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,100 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை நீடித்த மழையால் நட்சத்திர ஏரி மற்றும் பேரிஜம் ஏரி நிரம்பி வழிகின்றன. நட்சத்திர ஏரி சாலை பகுதியில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழநி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நகரில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டிய பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது. அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை பலகைகளை வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : districts ,Madurai ,villages , Rain, Madurai
× RELATED தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில்...