கட்டுபடியான விலை கிடைக்கவில்லை...!! வயல்களிலேயே காயும் கொத்தமல்லி: அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்

கம்பம்: கட்டுபடியான விலை கிடைக்காததால் கம்பம் பகுதியில் மல்லி விவசாயம் செய்த விவசாயிகள் அதை அறுவடை செய்யாமலே விட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலமாகவும், சொட்டுநீர் பாசனம் மூலமாகவும் பயிர் செய்கின்றனர். ஒரு ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த மல்லி விவசாயத்தில், கடந்த மாதம் வரை விவசாயிகளிடம் கிலோ 50 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பால் கிலோ 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சந்தையிலும் மல்லி கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

மல்லி விலை மிகவும் குறைந்துள்ளதால், இது அறுவடை செய்யவரும் ஆட்களுக்கு கூலிக்குக்கூட கொடுக்க கட்டுபடி ஆகவில்லை. இதனால் விவசாயிகள் சிலர் இப்பகுதியில் விளைந்துள்ள மல்லியை அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர். இதனால் மல்லி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கம்பம் உழவர்சந்தை நிர்வாக அலுவலர் கண்ணதாசன் கூறுகையில், கீரைக்காக கொத்தமல்லியை சாகுபடி செய்கின்றனர். பனி, மழைக்காலம் என்பதால் தற்போது மல்லியின் பயன்பாடு குறைவாக இருக்கும்.

அதனால் இந்த சீசனில் மல்லி அதிகமாக பயிரிடுவது இல்லை. ஆனால் கம்பம் பகுதியில் அதிக இடங்களில் மல்லி பயிர்செய்துள்ளனர். இதன் அதிக பட்ச வயது 50 நாட்கள் மட்டுமே. வளமான நிலங்களில் 45 நாட்களிலே அறுவடைக்கு வந்துவிடும். அறுவடைக்கு தயாரான ஒருவாரத்திற்குள்ளாக பறித்து விடவேண்டும். தற்போது மல்லியை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories:

>