வருசநாடு அருகே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா?...வெள்ளம் வந்தால் வீண் அலைச்சல்

வருசநாடு: வருசநாடு அருகே மூல வைகை ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் வெள்ளம் வரும் காலங்களில் மக்கள் பல கிலோமீட்டர் சுற்றி செல்கின்றனர். எனவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தரவேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வருசநாடு அருகே தர்மரஜபுரம் கிராமம் அமைந்துள்ளது. வருசநாடு கிராமத்திலிருந்து தர்மராஜபுரம் கிராமம் மற்றும் மயிலாடும்பாறை வழியாக தேனி பிரதான சாலை அமைந்துள்ளது. அதேபோல தர்மராஜபுரம் கிராமத்திலிருந்து  மயிலாடும்பாறை கிராமத்திற்கு மற்றொரு சாலை அமைந்துள்ளது. பிரதான சாலை வழியாக சென்றால் தொலைவு மிகவும் குறைவு.

எனவே வருசநாடு பகுதியை சேர்ந்த பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஓட்டணை சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். சாலையின் குறுக்கே மூல வைகை ஆறு அமைந்துள்ளது. ஆனால் ஆற்றில் பாலம் அமைக்கப்படவில்லை. எனவே ஆற்றில் நீர்வரத்து ஏற்படும் நேரங்களில் இந்த சாலை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் அதிக தொலைவு உள்ள பிரதான சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே தர்மராஜபுரம்-செல்வராஜபுரம் கிராமத்தின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்த சேரன் கூறுகையில், தர்மராஜபுரம் மூல வைகை ஆற்றை கடந்து ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது.

எனவே நீர்வரத்து உள்ள நாட்களில் விவசாய விளைபொருட்களை சந்தைகளுக்கு அனுப்பிவைக்க விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு சிலர் கட்டவண்டி மூலம் விவசாய விளைபொருட்களை ஆற்றை கடந்து கொண்டு செல்கின்றனர். மேலும் மற்றொரு சாலை வழியாக விளைபொருட்களை அனுப்பி வைக்க காலதாமதம் ஏற்படுவதுடன் பெரும் செலவும் ஏற்படுகிறது. எனவே தேனி மாவட்ட நிர்வாகம் மூல வைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>