பண்ணாரி அருகே சரக்கு லாரியை வழிமறித்த ஒற்றை யானை; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

சத்தியமங்கலம்: பண்ணாரி அருகே சரக்கு லாரியை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் அவ்வப்போது காட்டு யானைகள் பகல் நேரங்களில் நடமாடுவது வழக்கம். நேற்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி திம்பம் மலை அடிவாரத்தில் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையின் குறுக்கே நின்றிருந்த நீளமான தந்தங்களுடன் கூடிய ஒற்றை ஆண் யானை லாரியை வழிமறித்து மிரட்டியது. யானை லாரி முன்பு நிற்பதை கண்ட டிரைவர் அச்சமடைந்து லாரியை மெதுவாக முன்னோக்கி நகர்த்த யானை பின்னோக்கி நடக்கும்போது, யானை தலையை ஆட்டியது. பின்னர் யானை மெதுவாக சாலையோரம் சென்றது. அதன் பின்னர் லாரி புறப்பட்டுச் சென்றது. இந்த காட்சியை லாரியில் இருந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories:

>