கோவை தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு டெபாசிட் செய்ய முயற்சி: ஐ.டி. ஊழியரிடம் விசாரணை

கோவை: கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை  வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயற்சி செய்த நபரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் நேற்று முன்தினம் ஒருவர் தானியங்கி பணம் டெபாசிட் இயந்திரத்தில் ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய முயன்றார். சில ரூபாய் நோட்டுக்களை தானியங்கி இயந்திரம் ஏற்காமல் திருப்பி அனுப்பியது. அந்த ரூபாய் நோட்டுக்களை ஏற்காமல் அலாரம் ஒலித்து காட்டியது. ஆனால் அந்த நபர் தொடர்ந்து அந்த ரூபாய் நோட்டுக்களை திரும்ப திரும்ப டெபாசிட் செய்ய முயன்றார். இந்நிலையில், தனியார் வங்கியின் நிர்வாகிகள் தங்களது செல்போனிற்கு வந்த அலார்ட் எஸ்.எம்.எஸ். பார்த்து சம்பந்தப்பட்ட பணம் டெபாசிட் இயந்திரம் வைத்துள்ள இடத்திற்கு வந்தனர்.

பணம் டெபாசிட் செய்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், பணத்தை இயந்திரம் ஏற்க மறுப்பதாகவும், தான் தொடர்ந்து முயற்சி செய்வதாகவும் கூறினார். வங்கி நிர்வாகிகள் அந்த ரூபாய் நோட்டுக்களை வாங்கி பார்த்தனர். 500 ரூபாய் நோட்டுக்களை அவர் வைத்திருந்தார். 1.20 லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய முயன்றார். இதில் 40 எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுக்களை (20 ஆயிரம் ரூபாய்) இயந்திரம் ஏற்கவில்லை. வங்கி நிர்வாகிகள் இயந்திரம் ஏற்காத ரூபாய் நோட்டுக்கள் போலியானவை என்றும், அவை அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டுக்கள் என்றும் கூறி வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் கள்ள ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியை சேர்ந்த ஹிந்தோஷ் ஆனந்த் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது: திருவனந்தபுரத்தில் ஐ.டி. நிறுவனத்தில் அலுவலராக பணியாற்றுகிேறன். என்னிடம் இருந்த இட பத்திரத்தை அடமானம் வைத்து நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மதன்லால் என்பவரிடம்  பணம் வாங்கியிருந்தேன். அந்த பணத்தை அவர் திரும்ப கொடுத்துவிட்டார். அந்த பணத்தைதான் வடவள்ளியில் டெபாசிட் செய்ய வந்தேன். பணத்தை டெபாசிட் செய்துவிட்டு திருவனந்தபுரம் செல்ல திட்டமிட்டேன். இது கள்ள ரூபாய் நோட்டு என எனக்கு தெரியாது. இவ்வாறு ஹிந்தோஷ் ஆனந்த் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வடவள்ளி போலீசார் மதன்லாலிடம் விசாரணை நடத்தினர். அவரும் பணம் கொடுத்ததை ஒப்பு கொண்டார். தனக்கு வேறு ஒரு நபர் பணம் தந்ததாக அவர் கூறினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>