×

கேரள அரசின் கொரோனா கெடுபிடிகளால் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவு; களையிழந்தது நிலக்கல் பார்க்கிங்

கம்பம்: கொரோனா கெடுபிடிகளால் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. இதனால் நிலக்கல் பார்க்கிங் களையிழந்து காணப்படுகிறது. கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. 16ம் தேதி காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மாநில அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் பக்தர்களை அனுமதித்து வருகிறது. வார நாட்களில் ஆயிரம் பேர், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பேரும் மட்டுமே சன்னிதானம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து, அத்துடன் 24 மணிநேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை இணைத்து கேரளா  பாஸ் காண்பித்தால் மட்டுமே ஐயப்ப பக்தர்கள் சன்னிதானம் செல்ல  அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நடை திறக்கப்பட்ட கார்த்திகை முதல் நாளான  திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஐநூறுக்கும் குறைவான பக்தர்களே வந்தனர். வழக்கமாக சபரிமலை சீசனில்,  நிலக்கல் ரப்பர் எஸ்டேட்டில் உள்ள 300 ஏக்கர் பார்க்கிங்கில் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்த  வருடம் கொரோனா பீதியால் நிலக்கல் பார்க்கிங் பகுதி ஆள் அரவமற்று வெறிச்சோடி காணப்படுகிறது.

எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்

கேரளாவில் கொரோனா அதிகமாக இருப்பதால் கடந்த வாரம் வரை பொது இடங்களில் மாஸ்க் இல்லாமல் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. ஐயப்பன் கோயிலுக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை இருப்பதால் மாஸ்க் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் உடனடியாக ஸ்பாட் பைன் ரூ.500 ஆக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதனால் நிலக்கல்லை ஒட்டியுள்ள துலாப்பள்ளி, எருமேலி, பத்தினம்திட்டா, பந்தளம் ஆகிய பகுதிகளில் போலீசார் மற்றும் சுகாதார துறையினர் அதிகளவில் காணப்படுகின்றனர்.

Tags : visit ,Devotees ,government ,Sabarimala ,Kerala ,corona atrocities , Devotees' visit to Sabarimala is low due to Kerala government's corona atrocities; Weedy pavement parking
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...