×

அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது... ஆல் பாஸ் அறிவிப்பை ஏற்க முடியாது... யு.ஜி.சி. தொடர்ந்து முட்டுக்கட்டை

சென்னை: அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக,  தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு, இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகளை  ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.  அதேபோல,  அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.  இந்த வழக்குகளுக்கு பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.

 பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், ‘இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது. அரியர் தேர்வுகளை ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை’ எனத்  தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது எனக் கேள்வி எழுப்பிய  உயர்நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

 இந்த  வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை அரியர்ஸ் மாணவர்களுக்கு  தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றுவிட்டதாக  அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரியர்ஸ் தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டுமெனவும், ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அதனை உடனடியாக திரும்பப் பெற்று புதிய அறிவிப்பாணை  வெளியிட்டு, அரியர் தேர்வை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தான் இன்று நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டார்.  அந்த பதில் மனுவில்,அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது. அரியர் தேர்வை ரத்து செய்வது விதிகளுக்கு முரணானது, கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப்பருவத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும், முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதிப்பருவ மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க முடியாது, என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கி வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Ariar ,Boss , Ariar Exam, Cancellation, All Pass, UGC. , Stumbling block
× RELATED திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடி...