பழநியில் இடப்பிரச்னையில் துப்பாக்கிச்சூடு குண்டு பாய்ந்த விவசாயி பலி: தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு

பழநி: பழநியில் இடப்பிரச்னையில் நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் தொடர் சிகிச்சையில்  உள்ளார். துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி டவுன், அப்பர் தெருவில் 12 சென்ட் காலியிடத்தை சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பழநி அருகே அக்கரைப்பட்டியை  சேர்ந்த இளங்கோவன் (58) வாங்கியதாக கூறப்படுகிறது. இதே இடத்தை அப்பகுதியில் வசித்து வரும் தியேட்டர் உரிமையாளரான நடராஜன் (80)  உரிமை கோரி வந்துள்ளார். இளங்கோவனின் மாமனாரான, விவேகானந்தர் நகரை சேர்ந்த பழனிச்சாமி (74), ராமபட்டினம் புதூரை சேர்ந்த விவசாயி  சுப்பிரமணி (57) உள்ளிட்ட சிலர் பிரச்னைக்குரிய காலியிடத்திற்கு வேலி அமைக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.

அப்போது நடராஜன்  அங்கு வந்து தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் கேட்காததால், திடீரென தனது ரிவால்வர் வகை துப்பாக்கியை எடுத்து பழனிச்சாமி,  சுப்பிரமணியை நோக்கி அடுத்தடுத்து சுட்டார். இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.இருவரும் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  பழனிச்சாமியின் பின்னந்ெதாடையில் பாய்ந்த குண்டு அறுவை சிகிச்சை மூலம்  அகற்றப்பட்டது. இடுப்பு பகுதியில் குண்டு பாய்ந்த சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை  பலனின்றி நேற்று அதிகாலை 2 மணியளவில் அவர் பரிதாபமாக இறந்தார். பழனிச்சாமி தொடர் சிகிச்சையில் உள்ளார். இதையடுத்து பழநி டவுன்  போலீசார், தியேட்டர் உரிமையாளர் நடராஜன் மீது கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>