அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீது ஆதாரங்களுடன் புகார் தரலாம்: விசாரணை நீதிபதி கலையரசன் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஆதாரங்களுடன் புகார் தரலாம் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, அதில் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் என்றும் மற்றொன்றை உயர் சிறப்பு அந்தஸ்து கல்வி  மையமாகவும் அமைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா, மத்திய மனித வளத் துறைக்கு அரசின் கருத்தை  கேட்காமல் கடிதம் ஒன்றை தன்னிச்சையாக எழுதினார். இதற்கு கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும்  எதிர்ப்பு எழுந்தது. மேலும், அரசிடம் ஆலோசிக்காமல் அவர் செயல்பட்டது ஆளும் அதிமுக அரசுக்கு நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, `அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அந்த சிறப்பு அந்தஸ்தே தேவையில்லை’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  வெளிப்படையாக தெரிவித்தார்.அதுமட்டுமல்லாமல் பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக  அறிவிக்கப்பட்ட விஷயத்தில் தமிழக அரசுக்கும் துணைவேந்தர் சூரப்பாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.பல்கலைக்கழகத்தில் தனது மகளுக்கு பணி வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அண்ணா பல்கலைக்கழகத்தின் நிதியில் சுமார் 200  கோடிவரை முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்தில் 13 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஒவ்வொருவரிடமும்  வாங்கியதில் சுமார் 80 கோடிவரை முறைகேடு நடந்துள்ளது. இதில் துணை வேந்தருக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்தன. இந்த  குற்றச்சாட்டுகள் அனைத்தும் தமிழக அரசுக்கு புகார் மனுவாக வந்துள்ளது.

பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் பணி நியமனம்  வழங்கியதாகவும் சூரப்பா மீது புகார் வந்துள்ளது.இதையடுத்து, துணை வேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீதான புகார் மீது விசாரணை நடத்த உயர்  நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இதுகுறித்து அவர் கூறும்போது, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது உரிய ஆதாரங்களுடன் புகார் தரலாம். புகார் தருபவர்களிடம்  விரிவான விசாரணை நடத்தப்படும். சூரப்பாவின் பதவி காலத்திற்கு முன்பு முறைகேடுகள் நடந்திருந்தாலும் புகார் தரலாம் என்றார்.

Related Stories:

>