×

கழிவுநீர் லாரியை சிறை பிடித்து திமுகவினர் போராட்டம்

ஆவடி: ஆவடி மாநகராட்சி அண்ணனூர், ஸ்ரீசக்தி நகரில்  கழிவு நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு ஆவடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளில்  உள்ள வீடுகளில் இருந்து அகற்றப்படும் கழிவுநீரை, ஒப்பந்த லாரிகள் மூலம் கொண்டு வந்து விடுகின்றனர். இதுபோல் தினமும் 12 லாரிகளில் 180  முறை  கழிவு நீரேற்று நிலையத்தில் விடப்படுகிறது.
மேலும், அம்பத்தூர் மண்டலம், பூந்தமல்லி நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இருந்து கழிவுநீர் கொண்டு வந்து, மேற்கண்ட  சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டுத்தனமாக விடுகின்றனர்.குறிப்பாக, லாரிகளில் கொண்டு வரும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடும்  அவதியடைகின்றனர். இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்  அலட்சியமாகவே  உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் ஆவடி மாநகர திமுக சார்பில் சுத்திகரிப்பு நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் சுதாகர்,  வட்ட செயலாளர் பெருமாள் உள்பட கட்சி தொண்டர்கள், பொது நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, அங்கு வந்த கழிவுநீர் லாரிகளை, அவர்கள் சிறை பிடித்தனர்.  தகவலறிந்து ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம்  பேசினர்.

அப்போது, அவர்கள் அண்ணனூர் கழிவு நீரேற்று  நிலையத்தில், அப்பகுதி கழிவுநீரை கொண்டு வரும் லாரிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  மற்ற பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் லாரிகள் வர கூடாது என உறுதி அளித்தால் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர்.இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கண்ட கழிவுநீரேற்று நிலையத்தில் அப்பகுதியில் கழிவுநீர் அகற்றப்படும் 3 லாரிகளை மட்டுமே  அனுமதிப்போம் என உறுதியளித்தனர். பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார்  1 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : protests ,DMK , DMK protests over seizure of sewage truck
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...