×

கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் சாரல் மழையாகவே இருந்தது. திடீரென, நேற்று முன்தினம்  மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.இதைதொடர்ந்து நேற்று காலை வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த மழையால் அரசு  அலுவலக ஊழியர்கள், தனியார் கம்பெனி பணியாளர்கள், கட்டிட வேலை செய்யும் கொத்தனார்கள், கூலித் தொழிலாளிகள் என பலரும்  பாதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் செவிலிமேடு, ஓரிக்கை, ஜெம் நகர் உள்பட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில்  மழைநீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

இதேபோன்று திம்மசமுத்திரம் ஊராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள்,  அலுவலர்கள் சிரமம் அடைந்தனர். மேலும் மழை அதிகரித்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் நிலை உள்ளதாகவும், இதனை தடுக்க  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இந்நிலையில், கனமழை காரணமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்,  ராஜ கோபுர நுழைவாயிலில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால்  கோயிலின் தொன்மையான மரக்கதவு மழைநீரில் ஊறி சேதமடையும் சூழல் உள்ளது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேங்கியுள்ள மழைநீரை  மிகவும் சிரமப்பட்டு  கடந்து சென்று, தரிசனம் செய்கின்றனர்.எனவே, கோயில் நிர்வாகம் இந்த மழைநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நேற்று காலை 8 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையளவு (மி.மீட்டரில்)விவரம்:
காஞ்சிபுரம்            -35.80
பெரும்புதூர்    - 24.80
உத்திரமேரூர்        - 77.00
வாலாஜாபாத்         - 14.80
செம்பரம்பாக்கம்  - 20.20



Tags : houses , Impact on public life by heavy rains: Houses tumbling under water
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...