×

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் நிர்வாகிகள் ஈடுபடவேண்டும்: திமுக தலைமைக்கழகம் அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் திமுக நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஜனவரி மாதம் 1ம்தேதி தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை  தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளது. 16.11.2020 முதல் 15.01.2020 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் பெயர்கள் நீக்கவும்  திருத்தம் செய்யவும் மனுச் செய்ய காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.இதுதவிர வருகின்ற 21, 22ம் தேதி மற்றும் டிசம்பர் 12, 13ம் தேதி ஆகிய 4 நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட  உள்ளன. இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும் இடம் மாறிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள்  மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து அந்த படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத  பெயர்களையும் புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் தொகுதியில் இருந்து  இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, நகரிய, பேரூர், ஊர்க்கிளை,  வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தவேண்டும். மேலும்,  கழக செயலாளர்கள் பொறுப்பாளர்கள் சிறப்பு அக்கறையோடு இப்பணியில் ஈடுபட வேண்டும். இந்த பணி குறித்து நிர்வாகிகள் மேற்கொண்ட  நடவடிக்கைகளை தலைமைக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : Administrators ,DMK Headquarters Announcement , Administrators should be involved in the voter list verification process: DMK Headquarters Announcement
× RELATED ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் ஐக்கியம்