நிதி தள்ளாட்டத்தில் தவித்த லட்சுமி விலாஸ் வங்கி திவாலாகிறது? 25,000க்கு மேல் பணம் எடுக்க தடை: ரிசர்வ் வங்கி திடீர் கட்டுப்பாடு

மும்பை: லட்சுமி விலாஸ் வங்கி திவால் நிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள்  கணக்கில் இருந்து பணம் எடுக்க, ரிசர்வ் வங்கி திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது நேற்று உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி  வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக தங்கள் கணக்கில் 25,000 மட்டுமே எடுக்க முடியும். இந்த கட்டுப்பாடு அடுத்த மாதம் 16ம் தேதி வரை அமலில்  இருக்கும். தமிழகத்தை சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி, கரூரை தலைமையிடமாகக் கொண்டு 1926ம் ஆண்டு துவக்கப்பட்டது. பின்னர் தலைமை அலுவலகம்  சென்னைக்கு மாற்றப்பட்டது. இந்த வங்கி தற்போது 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நாடு  முழுவதும் 563 கிளைகள் உள்ளன. கடும் நிதி நெருக்கடியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கி, 2,200 கோடி நிதி திரட்ட அனுமதி கோரி ரிசர்வ் வங்கியை நாடியது பெரும் பரபரப்பையும்  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் கிளிக்ஸ் கேபிடல் ஆகியவற்றுடன் இந்த வங்கியை இணைக்கும்  முயற்சிகளும் ஈடேறவில்லை.

 மேலும், லட்சுமி விலாஸ் வங்கியின் 93வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், ஏற்கெனவே வங்கி நிர்வாகத்தில் இருந்த நிர்வாக இயக்குநர், தலைமை  செயல் அதிகாரி உட்பட 7 பேரின் மறு நியமனத்தை பங்குதாரர்கள் புறக்கணித்தனர். வங்கி வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இதுவே முதல்  முறை. இப்படி அடுத்தடுத்த சம்பவங்கள், நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையின்மையையும், லட்சுமி விலாஸ் வங்கி திவாலாகும்நிலையை எட்டுவதற்கான அறிகுறிகளையும் காட்டுவதாக கருதப்பட்டது. வராக்கடன் அதிகரிப்பால் வங்கியின் நிதி நிலை மோசமான நிலையில், இந்த வங்கியை சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்துள்ள ரிசர்வ்  வங்கி, வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு திடீர் கட்டுப்பாடு விதித்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. உடனடியாக இது அமலுக்கு வந்துள்ளது.  ஒரு மாதத்துக்கு இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும். இதன்படி,

* லட்சுமிவிலாஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு அல்லது இதர டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் இருந்து  25,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது.

* ஒருவரே இந்த வங்கியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்திருந்தால், தனது கணக்குகளி–்ல் இருந்து மொத்தமாக மேற்கண்ட தொகையை  மட்டுமே எடுக்க முடியும்.

* உயர் கல்வி, மருத்துவ சிகிச்சை, திருமணம் அல்லது இதர தவிர்க்க முடியாத செலவினங்களுக்காக 25,000க்கு மேல் எடுத்துக் கொள்ளலாம்.  

அதிகபட்சம்  5 லட்சம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெபாசிட்தாரர்கள் பாதுகாப்பு, நலன் மற்றும் வங்கி ஸ்திரத்தன்மை கருதியே, வங்கி முறைப்படுத்துதல் சட்டம் 1949 பிரிவு 45க்கு உட்பட்டு இந்த  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள் 30 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர் நஷ்டங்கள் காரணமாக வங்கியின் சொத்து மதிப்பு குறைந்து வந்துள்ளது. வராக்கடன்  அதிகமானதால் ஏற்பட்டுள்ள நஷ்டங்கள் மேலம் தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த  கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காலக்கட்டத்துக்குள் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வரைவு திட்டத்தை செயல்படுத்த  ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

Related Stories:

>