ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறப்பு மாமல்லபுரம் சிற்பங்களை பார்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?: அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி வழங்கியதைபோல், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை  மக்கள் கண்டு களிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள் என அனைத்து தரப்பினரும்  எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

மாமல்லபுரம் புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலமாகவும், கோயில்கள் நிறைந்த நகரமாகவும் விளங்குகிறது. மேலும், மாமல்லபுரம் என்றாலே சிற்பங்களுக்கு  பெயர்போன ஊர். இங்கு தினமும் 1000 முதல் 2000 சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள், இங்குள்ள பல்லவர் கால சிற்பங்களை கண்டு  ரசித்து அவற்றின் முன் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக வந்து இங்கு 2 முதல் 5 நாட்கள் வரை தங்கி நகரை சுற்றி உலா  வருவார்கள். தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து ஏப்ரல், மே மாதங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கார், வேன்,  பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்வார்கள்.

இதனிடையே, கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மத்திய தொல்லியல் துறை உத்தரவின்  பேரில் மாமல்லபுரம் தொல்லியல் அதிகாரிகள் அனைத்து பல்லவர் கால சிற்பங்களின் கதவுகளை பூட்டு சீல் வைத்தனர்.

ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி பொது போக்குவரத்து, சினிமா தியேட்டர்கள், ஜவுளி கடைகளை சமூக இடைவெளியை பின்பற்றி திறக்க அரசு  உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான கொடைக்கானால், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள்  திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தை திறக்க இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால்,  சாலையோர பார்வையாளர்கள் சுற்றுலா தலத்தை பார்க்க முடியாமலும், வியாபாரிகள், சங்கு மணி விற்பவர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள்  வருவாய் இல்லாமலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>