பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அதிரடி தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளும் குற்றவாளிகளே

புதுடெல்லி: ‘தீவிரவாதத்தை ஆதரிக்கும் மற்றும் உதவும் நாடுகளும் குற்றவாளிகளாக நடத்தப்பட வேண்டும். ஐநா, சர்வதேச நிதியம் போன்ற  சர்வதேச அமைப்புகளில் கட்டாயம் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்’ என பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட சர்வதேச அமைப்பு பிரிக்ஸ்.  இந்த ஆண்டு ரஷ்யா  தலைமையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு வீடியோ கான்பரன்சிங் முறையில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன  அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பிரதமர் மோடி மாநாட்டில் பேசியதாவது:இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை தீவிரவாதம். தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் மற்றும் உதவி செய்யும் நாடுகளும்  குற்றவாளிகளாக நடத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரம், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கையாளப்பட வேண்டும்.

இன்று ஐநாவை சுற்றி பல கேள்விகள் எழுந்துள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச நிதியம், உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச  அமைப்புகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 75 ஆண்டாகியும் எந்த மாற்றமும் இல்லாத இந்த அமைப்புகளில் மாற்றம் செய்ய  வேண்டிய நேரம் வந்து விட்டது.எனவே ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்த்திருந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்பதை இந்தியா நம்புகிறது. இந்த  விஷயத்தில் பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கையில் பிரிக்ஸ்  நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் நாங்கள் மிகப்பெரிய சீர்த்திருத்த நடவடிக்கையை தொடங்கி  உள்ளோம்.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக வளர்ச்சி அடைவதோடு உலகளாவிய மதிப்பு சங்கிலிக்கு வலுவாக  பங்களிப்பையும் வழங்கும். கொரோனா பாதிப்பின் போதே நாங்கள் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு மருந்துகளை சப்ளை செய்துள்ளோம். அதே போல கொரோனா தடுப்பூசி  தயாரிப்பிலும் எங்களின் நடவடிக்கை மனிதாபிமான அடிப்படையிலேயே இருக்கும். உலகத்திற்கு தேவையான அதிகளவிலான கொரோனா  தடுப்பூசிகளை தயாரிக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.  

இந்தியாவுடன் இணைய தயார்

பிரதமர் மோடியை தொடர்ந்து பேசிய சீன அதிபர் ஜின்பின், ‘‘கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக  இருக்கிறோம். கொரோனாவை எதிர்த்து உலகம் ஒன்றுபட்டு இணைந்து போராட வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>