×

நான் டி காக் விசிறி...: பட்லர் பரவசம்

லண்டன்: தென் ஆப்ரிக்க அணி கேப்டன்  குயின்டன் டி காக்கின் மிகப்பெரிய விசிறி நான் என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து கிரிக்கெட் அணி  டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதற்காக   தென் ஆப்ரிக்கா புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய  இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான  ஜோஸ் பட்லர் கூறுகையில், ‘நான் டி காக்கின் மிகப்பெரிய ரசிகன். கிரிக்கெட் குறித்த தேர்ந்த அறிவுடன் திகழும் டி காக்  அற்புதமான வீரர்.  

ஆட்டம்  குறித்த அவரது பார்வையும், அதனை அவர் நடத்திச் செல்லும் விதத்தையும் நான் மிகவும் ரசிக்கிறேன். இன்றைய கிரிக்கெட் உலகில் அவர் எனக்கு  மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர். அவர் பேட்டிங்கிலும் சரி, விக்கெட் கீப்பிங்கிலும் சரி சிறப்பாக செயல்படுகிறார். தென் ஆப்ரிக்கா தொடரை  பொறுத்தவரையில் தொடரை கைப்பற்றுவது தான் எங்கள் இலக்கு. 2019 உலக கோப்பையில் செய்ததை  வரும் 2021, 2022களில் நடைபெற உள்ள  டி20 உலக கோப்பை தொடர்களிலும்  செய்ய இந்த சுற்றுப்பயணம் உதவும்’ என்றார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி  3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நவ.27ம் தேதி கேப்  டவுனில் நடக்கிறது. அடுத்த டி20 போட்டிகள் நவ.29, டிச.1ம் தேதிகளிலும்,  ஒருநாள் போட்டிகள் டிச. 4, 6, 9 தேதிகளில் நடக்கும். 10 நாட்கள் தனிமை: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து வீரர்கள்  10 நாட்களுக்கு ‘குவாரன்டைன்’ தொடங்கியுள்ளனர். தனிமைப்படுத்துதல்  முடிந்த பிறகு பயிற்சியை தொடங்க உள்ளனர். மேலும் வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட அனைவரும்‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையத்தில்  வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். போட்டிகள்,  ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் நடக்கும்.

7 மாதங்களுக்கு பிறகு: கொரோனா பீதி காரணமாக கடந்த 7 மாதங்களாக தென் ஆப்ரிக்க அணி சர்வதேச போட்டிகள் எதிலும் விளையாடவில்லை.  கடைசியாக மார்ச் மாதம் அந்த அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.  மழை, கொரோனா காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.  அதன் பிறகு இங்கிலாந்துடன் தான் சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது.



Tags : De Gock ,Butler , I'm a De Gock fan ...: Butler is ecstatic
× RELATED மைதானம் மோசம்…பட்லர் அதிருப்தி