×

கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்று; ஐயப்ப பக்தர்கள் வராததால் திரிவேணி சங்கமம் வெறிச்சோடியது

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை என்பதால் முக்கியமான ஆன்மீகத்தலமாகவும் உள்ளது. குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் தரிசிக்கும் முக்கிய இடமாகவும் உள்ளது. நாடு முழுவதும் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து விட்டு கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இங்கு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி விட்டு மாலையை கழற்றி விரதத்தை முடிப்பது வழக்கம். இவ்வாறு சபரிமலை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். ஆண்டுதோறும் காத்திகை 1ம் தேதி (நவ.17ம் தேதி) தொடங்கி 2 மாதங்கள் கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இந்த நாளில் வரும் ஐயப்ப பக்தர்களை நம்பி இங்கு ஏராளமான வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைப்பார்கள். இதற்காக ஏராளமான பொருட்களை வாங்கி வியாபாரிகள் குவித்து வைப்பார்கள். குறிப்பாக வடமாநில வியாபாரிகள் ஆடைகள், ஷொட்டர், ரெயின்கோட், குடை, சூ, செருப்பு போன்ற பொருட்கள் விற்பதற்காக வருவார்கள்.

இவர்களின் வசதிக்காக பேரூராட்சி தற்காலிக கடைகள், வாகன பார்க்கிங் அமைத்து தினசரி வாடகைக்கு வழங்கும். இதற்கு நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படும். இதன்மூலம் பேரூராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களின் வருகை மிகவும் குறைந்துவிட்டது. வியாபாரிகளும் வரவில்லை. இதனால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தற்காலிக கடைகள் அமைக்காததால் நிரந்தர கடை வியாபாரிகள், கை வியாபாரிகள் அதிக முதலீடு செய்து பொருட்கள் வாங்கி வைத்துள்ளனர். வழக்கமாக கார்த்திகை 2ம் தேதியான இன்று ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். வழக்குத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் யாரும் வரவில்லை. இதனால் அதிக முதலீடு செய்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐயப்ப பக்தர்கள் வரவில்லை என்றாலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர், அண்டை மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

அவர்கள் செல்பி, குடும்பத்தோடு புகைப்படம் எடுப்பதற்காகவும் கடலில் இறங்கி ஆபத்தான பாறைகளில் ஏறுகின்றனர். ஆனால் கன்னியாகுமரியில் பாதுகாப்புக்காக போலீசார் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் ஆபத்தான பாறைகளில் ஏறும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் சூறைக்காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலை பாறைகளில் மோதி பல அடி உயரத்திற்கு எழும்புகிறது. ஆனால் ஆபத்தை அறியாத சுற்றுலா பயணிகள் செல்பி மோகத்தில் பாறைகளில் ஏறுகின்றனர். இவ்வாறு இன்று காலை செல்பி எடுப்பதற்காக பாறையில் ஏறிய வாலிபர் ஒருவர் அலையில் இழுக்கப்பட்டு கடலில் விழுந்தார். அவருடன் வந்தவர்கள் சாதூரியமாக செயல்பட்டு அவரை மீட்டனர். இதுபோல் அடிக்கடி நடப்பதால் உயிர்ப்பலிகள் ஏற்படுவதற்கு முன் பாதுகாப்புக்காக போலீசாரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : storm ,Kanyakumari ,sea ,Triveni Sangam ,devotees ,Ayyappa , Kanyakumari storm in the sea; The Triveni Sangam was deserted as Ayyappa devotees did not come
× RELATED கன்னியாகுமரி மாவட்டம்...