திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத அவலம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழலில் பாதுகாப்பு கருதி கயிறு கட்டி நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டு ஜே ஜே நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. ஜே ஜே நகர் பகுதியில் இருந்து காசிபாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளுக்கு வர ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ள சூழ்நிலையில் ஏற்கனவே சபரி ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அடிக்கடி ஓடை நீர் குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக ஓடை நீரோடு மழைநீரும் சேர்ந்து அப்பகுதியில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் நிலவி வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டிலிருந்து காசிபாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாகவும் சில நேரங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்பதால் பெண்கள் பாதுகாப்பு கருதி கயிறு கட்டி ஒருவர் பின் ஒருவர் செல்லவேண்டிய சூழல் நிலவுவதாகவும் மழை நீர் , ஓடை நீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் ஏற்பட்டு தோல் நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் தேங்கியுள்ள நீர் வீடுகளுக்குள் வருவதால் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>