பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம்!: இந்திய தேர்தல் ஆணையம் கவுரவிப்பு..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசின் அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜுவின் பரிந்துரையை ஏற்று தலைமை தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாபின் மொகா மாவட்டத்தில் பிறந்த சோனு சூட் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் வில்லனாக நடித்து சோனு சூட் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவராவார். நடிகர் சோனு சூட் கொரோனா வைரஸ் தொடங்கியதில் இருந்தே பல உதவிகளை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக பெரிய நகரங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரது சொந்த செலவில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். கேரளாவில் சிக்கிய 150 வெளிமாநில பெண் தொழிலாளர்களை தனி விமானம் மூலமாக அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார்.  

உயர்கல்வியைத் தொடர விரும்பும் சலுகை இல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால் தேசிய அளவில் அவரது புகழ் பரவியது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிக்கிக்கொண்ட புலம்பெயர்ந்தோருக்கு வாகன வசதிகளை செய்து கொடுத்து மனிதநேயத்துடன் பணியாற்றியது, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில், நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு நடிகர் சோனு சூட் தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>