மூடநம்பிக்கையால் அரங்கேறும் கொடூரம்: உ.பி.யில் குழந்தை பேறு வரத்துக்காக 7 வயது சிறுமி நரபலி.. உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்ட அதிர்ச்சி..!!

லக்னோ: குழந்தை பேறு கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையால் சிறுமி ஒருவர் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்டிருப்பது உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கான்பூரை ஒட்டிய புறநகர் பகுதியில், உடல் பாகங்கள் பிடுங்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் கிடந்தது. உடலை கைப்பற்றிய உத்திரப்பிரதேச காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தை பேறு கிடைப்பதற்காக சிறுமியை கொன்று நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியை நரபலி கொடுத்த அங்குல், பீரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து கான்பூர் எஸ்.பி. பிரிஜேஷ் குமார் தெரிவித்ததாவது, பரசுராம் என்பவர் தான் அங்குல், பீரன் ஆகியோருக்கு பணம் கொடுத்து இருக்கிறார். இருவரும் மது அருந்திவிட்டு சிறுமியை கடத்தியிருக்கின்றனர்.

முதலில் சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர். பிறகு சிறுமியை கொடூரமாக கொன்றுவிட்டு, அவரது நுரையீரலை துண்டித்து எடுத்து சென்று குழந்தை இல்லாத பரசுராம் தம்பதியிடம் கொடுத்துள்ளனர். கொலைக்கு காரணமான நான்கு பேரையும் கைது செய்துள்ளோம் என குறிப்பிட்டார். சிறுமியின் நரபலிக்கு காரணமான பரசுராம் தம்பதியையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அறிவியல் தொழில்நுட்பம், அபரிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த சூழலிலும், குழந்தை பேறு கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையால் சிறுமி ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: