×

ஊட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுத்தை பலி

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள மசக்கல் கிராமத்தில் குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசக்கல் கிராமத்து மக்களின் உபயோகத்திற்காக கக்குச்சி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் கிணறு ஒன்று அப்பகுதியில் அமைத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக கிராமத்திற்குள் குடிநீர் வராததை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கிணறு அருகே சென்று பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வனத்துறையினர் சென்று சிறுத்தையை மீட்டனர்.  

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறுத்தை இறைக்காக ஏதேனும் சிறிய விலங்கை  விரட்டி வந்திருக்கலாம். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள்  விழுந்திருக்கலாம். இறந்த சிறுத்தைக்கு 4 வயது இருக்கக்கூடும். இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம். சிறுத்தை மேலே வருவதற்கு  அங்குமிங்கும் தண்ணீரில் தத்தளித்ததில் மின் மோட்டாரின் வயர்கள் சேதமடைந்துள்ளது. உடல் கூறு பரிசோதனைக்கு பின்னரே சிறுத்தையின் இறப்புக்கான காரணம்
தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Ooty , The leopard fell into a well near Ooty and died
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்