திருப்பூரில் 530 கிலோ புகையிலை பொருளுடன் 2 பேர் கைது: சரக்கு ஆட்டோ பறிமுதல்

திருப்பூர்: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை திருப்பூர் வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 530 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் வடக்கு காவல் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ராயபுரம் பகுதியிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து வடக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று ராயபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 530 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக வாகனத்துடன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை கடத்தி வந்த திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவரும், தற்போது திருப்பூர் ஸ்டேட் பாங்க் காலனி பிவிஎஸ் குடியிருப்பில் வசித்து வருபவருமான தங்கராஜ் (37), திண்டுக்கல் பர்மா காலனியை சேர்ந்தவரும் திருப்பூரில் தங்கராஜூடன் தங்கி வசித்து வருபவருமான மதன்குமார் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>