×

10 ஆண்டுகளுக்கு பிறகு புளியங்குடி கண்மாயில் தேங்கிய மழைநீர்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே புளியங்குடியில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் தூர்வாரப்பட்டதால், 10 ஆண்டுகளுக்கு பிறகு மழைநீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் உப கோட்டத்தில் நடப்பாண்டில் ரூ.38.79 கோடி மதிப்பீட்டில் 61 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்டது. இத்திட்ட பணிகளுக்கு அப்பகுதி ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம், நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 10 சதவீதம் தொகையும், அரசின் பங்களிப்பு 90 சதவீத தொகையுடன், பதிவு பெற்ற விவசாய சங்கத்தின் நியமன முறையில் இப்பணி நடந்து வந்தது.

முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடியில் ரூ.80.08 லட்சங்கள் மதிப்பில் கண்மாயில் புனரமைப்பு பணிகள் நடந்தது. அதன்படி கண்மாய் கரை பலப்படுத்தப்பட்டது. உள்வாய்ப் பகுதியில் அரசு நிர்ணயித்த அளவீட்டில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. தடுப்பணை, மதகுகள் மராமத்து செய்யப்பட்டது. இந்நிலையில் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த அக்.28ம் தேதி முதல் பருவமழை பெய்து வருகிறது. இதனால் புளியங்குடி கண்மாய் உள்வாய்ப்பகுதி பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. விவசாயத்திற்கு பயன்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, புளியங்குடி பகுதியில் பிரதான பயிரான நெல் 300 ஹெக்டரில் பயிரிடப்படுகிறது. அடுத்தப்படியாக மிளகாய், சோளம் வகை பயிர்கள் உள்ளிட்ட சிறுதானியங்கள், கோடையில் பருத்தியும் விவசாயம் செய்யப்படுகிறது. மானாவாரி எனப்படும் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுவதால், மழை பொய்த்து போனால் விவசாயமும் பொய்த்து போகும் நிலை உள்ளது. இந்தாண்டு பருவமழை தாமதமாக பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகளும் தாமதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் மராமத்து செய்யப்பட்டது. இதனால் கண்மாய் உள்வாய்பகுதி பள்ளங்களில் தற்போது பெய்து வரும் மழைக்கு, மழைநீர் தேங்கி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பெருகி வருகிறது. இன்னும் கூடுதலாக மழை பெய்தால் கண்மாய் முழுவதும் நிறையும் நிலை உள்ளது. இத்தண்ணீர் தாமதமாக செய்யப்படும் விவசாய பயிர்களுக்கு பயன்படும் வகையில் நிறைந்து வருகிறது. கோடை வரை கிடந்தால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், பருத்தி விவசாயத்திற்கும் பயன்படும் என்றனர்.

Tags : Rainwater stagnant in Puliyangudi after 10 years: Farmers happy
× RELATED வாரணாசியில் மோடியை எதிர்த்து...