×

கஜாபுயல் கோரதாண்டவத்தின் 2ஆண்டுகள் நிறைவு அரசு அறிவித்த நிவாரணம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை: பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை

புதுக்கோட்டை: பொதுமக்கள் மனதில் ஆறாத வடுவாய் இருக்கும் கஜா புயல் கோரத்தாண்டவமாடி நேற்றுடன் (16-12-2020) 2 ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 2018 நவம்பர் 16ஆம் தேதி அதிகாலையில் டெல்டா மாவட்டங்களில் மூன்று மணி நேரம் வீசிய கஜா புயலின் கோரத்தாண்டவம் அப்பகுதி பொதுமக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி வீசியது. கஜா புயல் மா, பலா, வாழை, தேக்கு, தென்னை, சவுக்கு, முந்திரி உள்ளிட்ட பணப்பயிர்களையும் அழித்துச் சென்றது.

தங்களது ஒட்டு மொத்த வாழ்நாளில் பார்த்து பார்த்து சிறிது சிறிதாக சேர்த்து வைத்து கட்டிய 2.17 லட்சம் வீடுகளையும் சேதப்படுத்தி சென்ற கஜா புயல் லட்சக்கணக்கான கால்நடைகளின் உயிர்களைப் பறித்து சென்றது. மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்களை சாய்த்து சென்ற கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மின்சாரம் இன்றி அப்போதைய காலகட்டத்தில் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை தவித்து வந்தனர். கஜா புயல் பாதிப்பு பிறகு உணவின்றியும், இருக்க இடமின்றி தவித்த பொதுமக்கள் தங்களது ஒவ்வொரு நாளையும் கடந்து செல்ல ஒரு யுகம் போல் ஆனது. இந்நிலையில் தமிழக அரசு புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

மேலும் மத்திய குழுவினரும் புயல் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தி அந்த ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கும் சமர்ப்பித்தனர். மேலும் தமிழக அரசு புயலால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.பத்தாயிரம், பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4,000 அறிவித்து சேதமடைந்த அவரவரின் வங்கி கணக்கில் நிவாரண பணம் வரவு வைக்கப்படும் என்று கூறியிருந்தது. மேலும் முழுமையாக சேதமடைந்த வீடுகளை கணக்கீடு செய்து தமிழக அரசு சார்பில் புதிய வீடு கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பையும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கஜா புயல் பாதித்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுநாள்வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 10 சதவீத மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை வரவில்லை. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இதுவரை வீடுகூட கட்டித் தரவில்லை என புதுக்கோட்டை மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது: கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டது. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரணங்களை தருவதாக அறிவித்திருந்தது.

ஆனால் தங்கள் பகுதியில் உள்ள சில நபர்களை தவிர மற்ற யாருக்கும் இதுவரை அரசு அறிவித்த நிவாரண பணம் வந்து சேரவில்லை. மேலும் அரசு வீடு கட்டித் தருவதாக அறிவித்து அதையும் இதுநாள்வரை நிறைவேற்றவில்லை. நிவாரணம் கேட்டு பல போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. இதன் பின்னர் புயலால் பாதித்து வீடுகளை இழந்த சிலர் தற்போது வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். மேலும் சிலர் அரசை நம்பி பயனில்லை என்று முடிவு செய்து கடன் வாங்கி வீட்டை சீரமைத்து உள்ளனர். தற்போது அந்த கடனைக் கூட கட்ட வழியின்றி தவித்து வருகின்றனர். இனி சேதமடைந்த வீடுகளை கூலி வேலை செய்து மீண்டும் கட்ட எங்களால் முடியாது.

அதனால் தமிழக அரசை மட்டுமே நம்பியுள்ள எங்களுக்கு புயலால் சேதமடைந்த வீடுகளை கட்டித் தரவேண்டும். அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தர எந்த ஒரு நிதியும் இதுவரை ஒதுக்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பசுமை வீடு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட வேறு திட்டங்களில் திட்டங்களில் வீடு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Tags : government ,completion ,suffering , We still do not have the relief announced by the government on the 2nd anniversary of the Gajapuyal tragedy: the suffering of the affected people
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா