×

கேரளாவை ஆக்கிரமித்த மைசூரு வெல்லம் பழநி வெல்லத்திற்கு மவுசு போச்சு...

பழநி: மைசூரில் தயாரிக்கப்பட்ட வெல்லம் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு வரப்பட்டதால் பழநி வெல்லத்திற்கு மவுசு குறைந்துள்ளது. பழநி பகுதி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு நன்கு நீர்ப்பாசனம் உள்ள பகுதிகளில் கரும்பு. நெல், கரும்பு பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் கரும்பு பெரும்பாலும் அமராவதி சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருவிழா நெருங்கி வருவதாலும், அரவணை பாயாசம், பொங்கலுக்கு அதிகளவு வெல்லம் தேவைப்படுகின்றன. இதன் காரணமாக பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி, மானூர், பாப்பம்பட்டி, கொழுமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெல்லம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு தயார் செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநில வியாபாரிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதுகுறித்து ராசாபுரத்தை சேர்ந்த பிரபு கூறியதாவது, தயார் செய்யப்படும் வெல்லம் ரோஸ்வுட், பொன்ரோஸ்வுட், செங்காள்ரோஸ்வுட் என தரத்தின் அடிப்படையில் மூன்று வகைப்படும். 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் தற்போது ரூ. 1250க்கு விற்பனை செய்யப்படுகிறது. மைசூரு வெல்லம் ரூ. 1080க்கு விற்பனை செய்யப்படுகிறது. மைசூரு வெல்லம் இல்லாவிட்டால் நமது ஊர் வெல்லம் ரூ. 1500 வரை விலை போகும்.  கேரள மாநிலத்திற்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் இருந்தே அதிகளவு வெல்லம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தற்போது கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கேரளாவிற்கு அதிகளவு வெல்லம் கொண்டு வரப்படுகிறது. இதனால் பழநி பகுதியில் இருந்து கொண்டு செல்லப்படும் வெல்லத்தின் அளவு குறைந்துள்ளது. ஜனவரி மாதம் துவங்கி மீண்டும் விற்பனை சூடாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Mysore Vellam Palani Vellam ,Kerala , Mausu Pochu for the Mysore Vellam Palani Vellam that occupied Kerala ...
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...