×

நீலகிரியில் கடும் மேக மூட்டம், சாரல் மழை: வாகன ஓட்டிகள் திணறல்

ஊட்டி: நீலகிரியில்  பல்வேறு பகுதிகளிலும் கடும் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் சில நாட்கள் மழை குறைந்து நீர் பனி காணப்பட்டது. அதே சமயம் பகல் நேரங்களில்  வெயில் அதிகமாக காணப்பட்டது. ஆனால், மீண்டும் மழை துவங்கியுள்ளது. எந்நேரமும் மேக மூட்டம் காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், சில சமயங்களில் கன மழை பெய்து வருகிறது. ஊட்டியில் மட்டுமின்றி, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இதே காலநிலை நீடிக்கிறது. இதனால், தற்போது  மாவட்டத்தில் குளிர் அதிகரித்துள்ளது. குளிரால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த மாறுபட்ட காலநிலையால், பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாய பயிர்களும் பாதித்துள்ளன. மேலும், வேலிவியூ, கேத்தி, லவ்டேல், பைக்காரா, குன்னூர் போன்ற பகுதிகளில் கடும் மேக மூட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சமவெளிப் பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் இந்த கடும் மேக மூட்டத்திற்கிடையே வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்களை ஓட்டிச்செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக மழை, பனி மற்றும் வெயில் என மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி,  சுற்றுலா பயணிகளுக்கும் வைரல் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.


Tags : Nilgiris ,Motorists , Nilgiris Heavy Clouds, Heavy rains: Motorists stagnate
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்