×

புத்தம் புது பேருந்துக்குள் ஒழுகுவது மழைநீரா, ஊழலா?..பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?: கமல்ஹாசன் விமர்சனம்

சென்னை: புத்தம் புது பேருந்துக்குள் ஒழுகுவது மழைநீரா இல்லை ஊழலா? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகள் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கின்றன. மாலை 6 மணிக்கு துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை தொடர்வதால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை காரணமாக பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க பேருந்துக்குள் மழைநீர் ஒழுகும் அவலமும் தமிழகத்தில் அரங்கேறுகிறது. தமிழக அரசு புதிதாக போக்குவரத்திற்கு அளித்த புதிய பேருந்துகளின் உள்ளே மழை நீர் ஒழுகுவதும் பயணிகள் குடை பிடித்தபடி பயணிக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மழை காலங்களில் தமிழகத்தில் இருக்கும் பேருந்துகள் மோசமாக ஒழுகுவதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு புத்தம் புது பேருந்து விட்டிருக்கிறது. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, பயணிகள் குடை பிடித்து உட்கார்ந்திருக்கின்றனர். பேருந்துக்குள் ஒழுகுவது மழைநீரா, ஊழலா?. பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா? என பதிவிட்டுள்ளார்.


Tags : Passengers ,party , Brand new bus, rainwater, corruption ?, umbrella, black flag for the ruling party ?, Kamalhasan
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...