×

அமெரிக்காவின் மற்றொரு கொரோனா மருந்து வெற்றி 94.5% பலனளிக்கும் மாடர்னா தடுப்பூசி

புதுடெல்லி: அமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் பலன் அளிப்பதாக இறுதி கட்ட பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் உலகின் பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதில் பல தடுப்பூசிகள் முதல் 2 கட்ட பரிசோதனையை  வெற்றிகரமாக முடித்து 3வது மற்றும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் 5 உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக  அந்நாட்டு அரசு அங்கீகரித்து வெளியிட்ட போதிலும், சர்வதேச நாடுகள் முழுமையாக ஏற்கவில்லை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்பூட்னிக் 5  தடுப்பு மருந்து தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.இதற்கிடையே, கடந்த வாரம் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்து 3ம் கட்ட பரிசோதனையில் 90 சதவீதம் பலன்  அளிப்பதாக அறிவித்தது. இது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பிய நாடுகள் பல பைசர் தடுப்பு மருந்து வாங்க முன்வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் மற்றொரு கொரோனா தடுப்பு மருந்து 94.5% பலன் அளிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோவி’ என  பெயரிடப்பட்டுள்ள இம்மருந்தை மாடர்னா மருந்து நிறுவனம், அமெரிக்க அரசின் நேரடி உதவியுடன் உருவாக்கி வருகிறது. இதன் மூன்றாம் கட்ட  பரிசோதனையில் 30,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 94.5% பேருக்கு மருந்து நல்ல பலன் அளித்துள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட  இடைக்கால அறிக்கையில் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மருந்து பைசர் மருந்தை போல விலை அதிகமானதாக இருக்காது  என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவிலும் கொரோனா மருந்து உருவாக்கும் முயற்சிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. தற்போது, இந்தியாவில் 5 வெவ்வேறு  தடுப்பூசி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘கோவாக்சின்’ தடுப்பு தற்போது இறுதி கட்ட பரிசோதனையை எட்டி  உள்ளது. பாரத் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) இணைந்து இம்மருந்தை  கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

கடந்த மாதம் முதல் மற்றும் 2ம் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்த கோவாக்சின் தற்போது மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தை  எட்டியிருக்கிறது. இதில், 26,000 பேருக்கு மருந்து வழங்கி பரிசோதிக்கப்பட உள்ளதாக, பாரத்பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா நேற்று  தெரிவித்துள்ளார்.

30,548 பேருக்குவைரஸ் தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி குறித்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8  மணிக்கு வெளியிட்டது.
* கடந்த 24 மணி நேரத்தில் 30,548 பேருக்குக் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13ம் தேதிக்குப் பிறகு குறைவான ஒருநாள்  பாதிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த பாதிப்பு 88 லட்சத்து 45,127 ஆக உயர்ந்துள்ளது.
* இதுவரை 82,49,579 பேர் குணமடைந்துள்ளனர். 4 லட்சத்து 65,478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நேற்று மட்டும் 435 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1,30,070 என அதிகரித்துள்ளது.
* குணமடையும் சராசரி 93.27 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.47% ஆகவும் பதிவாகியுள்ளது.

தடுப்பூசி மட்டும் போதாது
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம் என உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. இந்நிலையில், உலக  சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறுகையில், ‘‘தடுப்பூசியால் மட்டும் தொற்றுநோயை முழுமையாக ஒழித்து விட முடியாது.  தடுப்பூசி நமக்குள்ள மற்றொரு உபகரணம் அவ்வளவுதான். அதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம். எனவே, தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.  மக்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முதியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என எச்சரித்துள்ளார்.

* பைசர் மருந்தை சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும் அதிக பொருட் செலவு மிக்கது. அதற்கான வசதிகள் இந்தியாவில் இல்லாததால்  அம்மருந்தை வாங்க மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
* ஆனால் பைசர் மருந்தை போல மாடர்னா மருந்துக்கு அல்ட்ரா குளிர் சேமிப்பு வசதிகள் தேவையில்லை.
* மாடர்னா மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் குளிரில் 30 நாட்களுக்கும் -20 டிகிரி செல்சியசில் 6 மாதங்களுக்கும் சேமித்து வைத்திருக்க  முடியும்.
* எனவே இதன் விலை பைசர் மருந்தை காட்டிலும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : United States , Another corona drug hit in the US 94.5% effective moderna vaccine
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்